Such (is the Pilgrimage): whoever honours the sacred rites of God, for him it is good in the Sight of his Lord. Lawful to you (for food in Pilgrimage) are cattle, except those mentioned to you (as exceptions): but shun the abomination of idols, and shun the word that is false,- AL-Qur'aan - 21:30

Thursday, September 16, 2010

ஷவ்வால் மாத (ஆறு) நோன்புகள்


ரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரக்கூடிய மாதமான‌ ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம். இந்த ஷவ்வால் மாதத்தில் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி(ஸல்)அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றாகும். இந்த ஆறு நோன்புகளையும் நோற்பதினால் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை நமக்கு கிடைக்கும். ஆனால், நம்மில் அநேகமானோர் இந்த ஷவ்வால் மாத ஆறு நோன்பைப் பற்றி முழுமையாக அறியாத நிலையில் இருக்கிறோம். இன்னும் சிலர் இந்த‌ நோன்பின் சிறப்பை அறிந்தும் அதைக் கடைப்பிடிப்பதில் அலட்சியம் செய்கின்றனர். இன்னும் சிலரோ அறியாமையால், பெண்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்றுவதற்காக‌ இது அவர்களுக்கு மட்டும் உரியது என்று கருதுகின்றனர்.
யார் ரமலான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம் என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.                         
                                                            நூல்: முஸ்லிம்
மேற்கண்ட ஹதீஸ் பெண்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக முஸ்லிம்கள் அனைவருக்கும் கூறப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஷவ்வால் நோன்பின் சிறப்பும் தத்துவமும்:
நாம் நோற்கும் ஒவ்வொரு அமலுக்கும் 10 நன்மைகள் என்ற‌ அடிப்படையில் நமது முப்பது நோன்புகளுக்கு 300 நோன்புகளின் நன்மைகள் என்பதுடன், தொடர்ந்து வரக்கூடிய ஷவ்வாலின் இந்த ஆறு நோன்புகளுக்கு (6x10 =) 60 நோன்புகள், ஆக (300+60 =) 360 நோன்புகள் என்று ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மை நமக்கு கிடைக்கிறது என்பதை ஹதீஸ்களில் இருந்து அறிய முடிகிறது. ஆறு நோன்பின் தத்துவம் இது தான்!
இப்படிப்பட்ட சிறப்புமிக்க நோன்பை பலர் நோற்பதில்லை. ரமலான் மாதத்தின் 30 நோன்பை நோற்ற நமக்கு இந்த ஆறு நோன்புகளை நோற்பது ஒன்றும் சிரமமான காரியமல்ல. நன்மை எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதை ஆர்வத்துடன் தேடி முறையாக செயல்படுத்துவதே மறுமையை நம்பக்கூடிய முஃமீன்களின் அழகிய பண்புகளாக இருந்தது என்பதற்கு உத்தம நபித்தோழர்களின் சரித்திரங்கள் நமக்கு சான்று பகர்கின்றன. எனினும் இந்த ஷவ்வால் நோன்பைக் கடமையான நோன்பு என்று கருதிவிட‌க் கூடாது. அதன் சிறப்புகளையும் அளப்பரிய நன்மைகளையும் உணர்ந்து அவற்றை அடைய விரும்பியவர்கள் நோற்றுக்கொள்ளலாம்.
ஆறு நோன்பு ஆதாரமற்றதா?
இந்த ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்று சில‌ர் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறானதாகும். ஆறு நோன்பு நோற்பதற்கு ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.
ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது; அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                            அறிவிப்பவர்: ஸஃப்வான்(ரலி);  நூல்: தாரிமி (இதே ஹதீஸ் இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது)
எப்போது நோற்கவேண்டும்?
ஆறு நோன்புகளை பெருநாள் முடிந்து மறுநாளே ஆரம்பித்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நோற்க வேண்டுமா? அல்லது இம்மாதத்தில் ஏதேனும் ஆறு நாட்களில் விட்டு விட்டு நோற்கலாமா? என்பதற்கான விளக்கத்தைப் பார்ப்போம்.
யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நோன்புகள் நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்.
                          அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி);   நூல்:முஸ்லிம்
இந்த ஹதீஸில் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "தொடர்ந்து" என்ற வார்த்தையிலிருந்து பெருநாளைக்குப் பிறகுள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்கவேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.  இது தவறான கருத்தாகும். ஏனெனில் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, வரக்கூடிய‌ ஷவ்வாலிலும் ஆறு நாட்கள் நோன்பைத் தொடரவேண்டும் என்ற கருத்தில்தான் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே தவிர, பெருநாள் முடிந்து மறுநாளே ஆரம்பிக்கவேண்டும் என்றோ, அதை ஆறு நாட்களும் தொடர்ச்சியாகப் பிடிக்கவேண்டும் என்றோ கூறப்படவில்லை.
ரமலானைத் தொடர்ந்துதான் ஆறு நாட்கள் நோன்பு பிடிக்கவேண்டும் என்று அப்படியே வைத்துக் கொண்டாலும், பெருநாளில் நோன்பு பிடிப்பதற்குத் தடை உள்ளது.  ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்கள் கூட ஷவ்வால் பிறை 2 லிருந்து 7 வரை தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்றுதான் கூறுகின்றனர்.  இதில் "ரமலானைத் தொடர்ந்து" என்ற கருத்து அடிபட்டுப் போகின்றது.  ஒரு நாள் விடுபட்டு விட்டால்கூட‌ அது ரமலானின் தொடர்ச்சியாக ஆகாது.  மேலும் ஷவ்வால் பிறை 2 லிருந்து 7 வரைதான் ஆறு நோன்பு பிடிக்கவேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை. எனவே ஆறு நோன்புகள் தொடர்ச்சியாகப் பிடிக்கவேண்டும் என்பது ஆதாரமற்றதாகும். நபி(ஸல்)அவர்கள் ஷவ்வால் மாதத்தில் நோற்க வேண்டும் எனக்கூறினார்களே தவிர, ஷவ்வால் மாதத்தில் இந்த நாட்களில் தான் வைக்கவேண்டுமெனக் கூறாததால் ஷவ்வால் மாதத்தின் எந்த நாட்களிலும் தொடர்ந்தோ,விட்டுவிட்டோ வைக்கலாம். ஆக, (ஈதுல் பித்ர்) பெருநாள் முடிந்து மறுநாளிலிருந்தே தொடர்ச்சியாக ஆறு நாட்கள் இடைவிடாது நோன்பு நோற்கவேண்டுமென்பதே அவசியமில்லை. ஆனால் "ஷவ்வாலில்" என்று ஹதீஸ்களில் இடம் பெறுவதால் ஷவ்வால் மாதம் முடிவதற்குள் அந்த ஆறு நோன்புகளையும் வைத்து விட வேண்டும்.
அதாவது ஆறு நோன்புகளை நோற்கக்கூடிய ஒவ்வொருவரும் தத்தமது வசதிக்கு ஏற்ப ஷவ்வால் மாத கால எல்லைக்குள் அந்த நோன்புகளை நோற்றுவிடவேண்டும். இதையே மேற்கண்ட‌ ஹதீஸ்களும் கூறுகின்றன‌. எனவே, இந்த‌ நோன்புகளை தொடர்ச்சியாக பிடிக்கவேண்டுமென்றோ அல்லது மாதத்தின் ஆரம்பப் பகுதியில்தான் பிடிக்கவேண்டுமென்றோ இல்லை என்பதை இங்கு நாம் புரிந்துக்கொள்ளவேண்டும். மேலும் பெருநாளைக்கு மறுநாள் முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் பிடிக்கவேண்டும் எனும்போது இந்த நாட்களில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களோ அந்த நாட்களில் நோற்க இயலாமல் போகும் மற்றவர்களோ அந்த நன்மையை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆறு நோன்பு பற்றிய இதர சந்தேகங்களும் தெளிவுகளும்:
  • தனித்தனியாக ஆறு நோன்புகளையும் நோற்கலாம் எனும்போது வெள்ளிக்கிழமை வந்தால் அந்த நாளில் தனித்து நோற்கலாமா?
அப்படி இந்த ஆறு நோன்புகளையும் விட்டு விட்டு நோற்கும்போது வெள்ளிக் கிழமைகளில் தனியாக நோற்க முடியாது என்பதால் (பார்க்க), இடையில் வெள்ளிக்கிழமை வருமேயானால், வியாழக்கிழமையுடனோ சனிக்கிழமையுடனோ இணைத்தே நோற்கவேண்டும்.
  • ரமலான் கழித்து ஆறு நோன்பு பிடிக்கும் நேரத்தில் ரமலானில் விடுபட்ட நோன்பை நிறைவேற்றிவிட்டுதான் இந்த நோன்புகளை நோற்கவேண்டுமா?
கடமையான வணக்கம் மற்றும் உபரியான வணக்கம் என்ற இரண்டிலும் கடமையான வணக்கத்திற்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும். எனவே முதலில் களாவான நோன்புகளை நோற்ற பின்னர் இந்த சுன்னத்தான நோன்புகளை நோற்பதே சிறந்தது. ஏனெனில்,மனிதனின் வாழ்க்கைக் காலத்துக்கு எத்தகைய உத்தரவாதமும் கிடையாது. சில வேளை அவர் நோயாளியாகலாம். அல்லது ஏற்கனவே இருந்ததற்கு மேல் பலவீனப்பட்டு போக‌லாம். அல்லது மரணித்து கூட‌ விடலாம். எனவே ஒவ்வொருவரும் தன் மீதுள்ள கடமையான பொறுப்பை நிறைவேற்றிய பின்னர் சுன்னத்தான செயற்பாடுகளில் ஈடுபடுவதே பொருத்தமானதாகும். ரமலான் மாத நோன்பை இஸ்லாம் கடமை என விதித்துள்ளதால் அதை நிறைவேற்றிவிட்டால், இறைவனின் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். அதன் பின்னர் உபரியான நோன்பையும் நிறைவேற்றலாம். அதேசமயம், விடுபட்ட நோன்பு அதிக அளவில் இருந்து, அதையெல்லாம் நிறைவேற்றுவதற்குள் ஷவ்வால் முடிந்துவிடும் என்று அஞ்சினால், முதலில் ஷவ்வாலின் நோன்புகளை வைத்துக்கொள்ளலாம்.
இதல்லாமல், சில‌ சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் ரமலான் மாதம் விடுபட்ட நோன்பை அடுத்த ரமலானுக்கு முன் வரும் ஷஃஅபான் மாதம் வரை
நோற்கலாம் என்பதற்கு அன்னை ஆயிஷா(ரலி)அவர்களின் அறிவிப்பிலிருந்து விளக்கம் பெறமுடிகிறது.
"எனக்கு ரமலானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அவற்றை ஷஃஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களின் பணிவிடையில் ஈடுபட்டதே இதற்கு காரணம்."
                 அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி);  நூல்கள்: புகாரி,முஸ்லிம் 
அந்த‌ இடைப்பட்ட பத்து மாத கால எல்லைக்குள் ஆயிஷா(ரலி)அவர்கள் சுன்னத்தான நோன்புகள் எதனையும் நோற்றிருக்கமாட்டார்கள் என கூற‌முடியாது. ஏனெனில், அவர்களின் நோன்பு தொடர்பாக வந்துள்ள பெரும்பாலான‌ அறிவிப்புகளில் அவர்கள் சுன்னத்தான நோன்புகளை அதிகம் நோற்பவராக இருந்தார்கள் என்றே வந்துள்ளன. ஆக, விடுபட்ட ஃபர்ளான நோன்புகளை வேண்டுமென்றே தள்ளிப்போடாமல், தவிர்க்கமுடியாத அவசிய தேவைகளுக்காக பிற்படுத்தி நிறைவேற்றலாம் என்று விளங்கலாம்.
  •  விடுபட்ட‌ ரமலான் நோன்பையும் ஷவ்வாலின் ஆறு நோன்பையும் சேர்த்து நிய்யத் வைத்தால் இரண்டுக்குமுரிய நன்மைகளும் சேர்ந்து கிடைக்குமா? 
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் போன்று ஃபர்ளான‌ வணக்கங்களையும் சுன்னத்தான வணக்கங்களையும் இணைத்து செய்ய‌முடியாது. எவ்வாறு ஃபர்ளான தொழுகையையும் சுன்னத்தான தொழுகையையும் சேர்த்து ஒரே தொழுகையாக தொழ முடியாதோ அதைப் போல்தான் ஃபர்ளுடன் சேர்த்து எந்த உபரியான வணக்கங்களையும் செய்ய முடியாது. ஃபர்ளு என்பது வேறு, உபரியான வணக்கம் வேறு. இரண்டையும் தனித்தனியாக நிறைவேற்றும்போதுதான் அதனதன் நன்மைகள் கிடைக்கும்.
  • ஷவ்வால் முடிந்ததும் அதற்காக ஒரு பெருநாள் கொண்டாடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? 


'நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு நாட்களைதான்(பெருநாட்களாக) கொண்டாடுவதற்கு நபி(ஸல்)அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.' 
                   அறிவிப்பவர்:அனஸ்(ரலி);  நூல்: அபூதாவூது, நஸயீ 
ஆகவே, இந்த இரு நாட்களைத் தவிர வேறு எந்த நாட்களிலும் பெருநாள் கொண்டாட அனுமதியில்லை.
'நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாகச் செய்பவரது வணக்கம் நிராகரிக்கப்படும்' என்ற நபிகளாரின் எச்சரிக்கை கவனத்திற்கொள்ள
வேண்டியதாகும். 
                              அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி);   நூல்:புகாரி
அல்லாஹ் மிக அறிந்தவன்!
நன்றி : payanikkumpaathai

3 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    பயணிக்கும் பாதை வழியாக பயணப்பட்டு இங்கு வந்தேன்.உங்கள் ப்ளாக்கை மிக அழகாக வடிவைத்திருக்கிறீர்கள்.மாஷா அல்லாஹ்.எனக்கு ஒரு ஐயம் "ப்ளாக்கின் தலைப்பை அழகான முறையில் விதவிதமாய் தமிழ் எழுத்தால் அமைப்பது எப்படி?" (ப்ளாக்கர் தொடர்பான ஆக்கங்கள் இங்கு மிகுந்திருந்ததால் இப்படி ஒரு கேள்வி)அடுத்து ஒரு சந்தேகம், உங்கள் டெம்லேட் பின்புறம் "குர்-ஆனுடைய ஆயத்துகள் உள்ளன.ஆனால் அதற்கு மேலாக ஆயத்துகளை மறைக்கின்றன கட்டுரைகள்" இது சரிதானா....?

    ReplyDelete
  2. வா அழைக்கும் சலாம் வரஹ்.....
    எனுடைய ப்ளாக் வந்ததற்கு ரொம்ப்ப சந்தோசம்..!!! குலாம்..!!!

    ///....எனக்கு ஒரு ஐயம் "ப்ளாக்கின் தலைப்பை அழகான முறையில் விதவிதமாய் தமிழ் எழுத்தால் அமைப்பது எப்படி?" ...///

    http://knowledgeshareme.blogspot.com/2010/07/bannerlogo.html என்ற லிங்க் செல்லுங்கள்...

    ///...ஒரு சந்தேகம், உங்கள் டெம்லேட் பின்புறம் "குர்-ஆனுடைய ஆயத்துகள் உள்ளன.ஆனால் அதற்கு மேலாக ஆயத்துகளை மறைக்கின்றன கட்டுரைகள்" இது சரிதானா....? ...///

    இதில் எனக்கு எந்த தவறு இருபதாக தெரியவில்லை... இருந்தலும் நீங்கள் சொல்லும்போது மனதிற்குள் குழப்பமாக இருக்கிறது இதோ...!!! மாற்றிவிட்டேன்....
    உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் சந்தோசம்... அன்பரே...!!!

    ReplyDelete
  3. நன்றி., இன்ஷா அல்லாஹ் பார்வையிடுகிறேன்

    ReplyDelete

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails