Such (is the Pilgrimage): whoever honours the sacred rites of God, for him it is good in the Sight of his Lord. Lawful to you (for food in Pilgrimage) are cattle, except those mentioned to you (as exceptions): but shun the abomination of idols, and shun the word that is false,- AL-Qur'aan - 21:30

Thursday, September 30, 2010

Aayat al-Kursi Quran 2:255- 7

  اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ  ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ  ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
2:255. அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
2.255: Allah is He besides Whom there is no god, the Everliving, the Self-subsisting by Whom all subsist; slumber does not overtake Him nor sleep; whatever is in the heavens and whatever is in the earth is His; who is he that can intercede with Him but by His permission? He knows what is before them and what is behind them, and they cannot comprehend anything out of His knowledge except what He pleases, His knowledge extends over the heavens and the earth, and the preservation of them both tires Him not, and He is the Most High, the Great
  لَا إِكْرَاهَ فِي الدِّينِ  ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ 
 عَلِيمٌ
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
2.256: There is no compulsion in religion; truly the right way has become clearly distinct from error; therefore, whoever disbelieves in the Shaitan and believes in Allah he indeed has laid hold on the firmest handle, which shall not break off, and Allah is Hearing, Knowing.
  اللَّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا يُخْرِجُهُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ  ۖ وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ ۗ أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ  ۖ هُمْ فِيهَا خَالِدُونَ 
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.
2.257: Allah is the guardian of those who believe. He brings them out of the darkness into the light; and (as to) those who disbelieve, their guardians are Shaitans who take them out of the light into the darkness; they are the inmates of the fire, in it they shall abide
 

Wednesday, September 29, 2010

அன்னை ஆயிஷா (ரழி)


அன்னையின் சிறப்புகள் :

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆருயிர்த் தோழரும், அருமை நண்பருமான அபுபக்கர் (ரழி) அவர்களின் செல்வப் புதல்வி தான் அன்னை ஆயிஷா (ரழி) ஆவார்கள். திருமறைக் குர்ஆனில் பல இடங்களில் அன்னையவர்களைக் குறித்து பல குர்ஆன் வசனங்களை இறைவன் இறக்கியருளியுள்ளான் என்ற நற்பெருக்குச் சொந்தக்காரராவார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொண்ட மனைவியர்களில் மிகச் சிறப்பு வாய்ந்தவராக இருப்;பதிலும் அன்னையவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் அந்த சுவனச் சோலைகளில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய மனைவியாக இருப்பதற்கும் அல்லாஹ் அவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். இன்னும் அன்னையவர்களின் உருவத்தை பச்சைப் பட்டுத் துணியில் வைத்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களால் காட்டப்பட்ட நற்பெயருக்கும் சொந்தக்காரவார்கள். இன்னும் இவரை நீங்கள் மணக்கவிருக்கின்றீர்கள், இன்னும் இவரே மறுமைநாளிலும் உங்களுக்கு மனைவியாக இருக்கப் போகின்றவர் என்றும் அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் நன்மாரயம் கூறினார்கள்.

மிகச் சிறந்த அறிவாளியாகவும், அதிக ஞாபகசக்தியும் பெற்றுத் திகழ்ந்த அன்னையவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மிக நீண்ட காலங்கள் வாழ்ந்திருந்ததன் காரணமாக, அதிகமான நபிமொழிகளையும் நமக்கு அறிவிப்புச் செய்திருக்கின்றார்கள். இஸ்லாமிய பிக்ஹுச் சட்டங்கள், ஷரீஅத் சட்டங்கள் இன்னும் இஸ்லாமியச் சட்டங்களின் பல கிளைகளிலும் அன்னையவர்களுக்கு இருந்த தெளிவான ஞானத்தின் மூலமாகவும், அதன் விளக்கங்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மனைவியாக வாழ்க்கைப்பட்டிருந்ததன் காரணமாக அவர்களுடன் அதிக நேரங்கள் இணைந்திருந்ததன் காரணமாக அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டவைகள், இன்னும் நேர்மை, நாணயம், நம்பிக்கை ஆகியவற்றில் மிகச் சிறந்த விளங்கிய அன்னையவர்கள், அவர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்தார்கள் என்றால் அதில் மிகையில்லை.

அன்னையவர்கள் மிகவும் இளகிய மனதுடையவர்கள். அவர்களது வீட்டிற்குள் நுழைந்த எவரும் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றதில்லை. வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக இறைவனின் ஸலாமைப் பெற்றுக் கொண்ட நற்பேறு பெற்றவர்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மலரிதழ்களின் மூலமாக சொர்க்கம் உண்டென நன்மாராயத்தைப் பெற்றுக் கொண்டவர்களுமாவார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறுதி வாழ்வு அன்னையவர்களின் மடியில் தான் கழிந்தது. அதிலும், அன்னையவர்கள் வாழ்ந்த அந்த வீடு தான் இறுதித் தூதர் (ஸல்) அவர்களின் மண்ணறையாகவும், நெடுதுயில் கொள்ளும் இடமாகவும் ஆனது. அன்னையவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி, இப்பொழுதும் எப்பொழுதும் அவர்கள் வாழ்ந்த அந்த இல்லம் வானவர்களால் எப்பொழுதும் சூழப்பட்ட நிலையிலும், இறைவனின் சாந்தியும், சமாதானமும், அருளும் இறங்கிக் கொண்டிருக்கக் கூடிய, புகலிடமான மதீனாவாகவும் இருந்து கொண்டிருக்கின்றது.

இந்த உலகத்தில் தோன்றிய, இன்னும் தோன்றவிருக்கின்ற பெண்களில் மர்யம் பின்த் இம்ரான் (அலை) அவர்களைத் தவிர, மற்றவர்களைக் காட்டிலும் மிகச் சிறந்த அருட்கொடைகளுக்கு உரித்தானவராகத் திகழ்கின்றார்கள்.

வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அன்னையவர்களின் உருவத்தை பச்சைப் பட்டில் வைத்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கனவில் அன்னையவர்களின் உருவத்தைக் காண்பித்து, இவர் தான் இந்த உலகிலும், மறு உலகிலும் உங்களுக்கு மனைவியாக வாய்க்கப் போகின்ற பெண்மணி என்ற நன்மாரயத்தைப் பெற்றுக் கொண்டவர்களும்,

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மணமுடித்துக் கொண்ட பெண்களில் கன்னிப் பெண்ணாக இருந்த நிலையில் மணமுடிக்கப்பட்டவரும்,

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறுதி வாழ்வு அன்னையவர்களின் மடியில் கழிந்தது. இன்னும் அன்னையவர்கள் வசித்த இல்லத்தில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அடக்கமும் செய்யப்பட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அன்னையவர்களும் ஒன்றாக இருந்த பல சமயங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக வஹி அருளப்பட்ட நற்பெயருக்கு உரித்தானவரும்,

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆருயிர்த் தோழர், உற்ற நண்பர் அபுபக்கர் சித்தீக் (ரழி) அவர்களின் மகளும்,

அன்னையவர்களின் மீது களங்கம் சுமத்தப்பட்ட பொழுது, அத்தகைய களங்கத்திற்கு சொந்தக்காரரல்ல என்று இறைவனே சாட்சியமளித்து திருமறை வசனத்தை இறங்கிய நற்பேற்றுக்கும் உரித்தானவரும்,

முஸ்லிமாகவே பிறந்து, முஸ்லிமாகவே வளர்க்கப்பட்டவரும், மிகவும் பரிசுத்தமான சூழ்நிலையில் வார்த்தெடுக்கப்பட்டவரும்,

வல்லோனானாம் அல்லாஹ் தனது மன்னிப்பையும், பேரரருட் கொடைகளையும் அன்னைக்கு வழங்க இருப்பதாக வாக்குறுதி அளித்த அதிர்ஷ்டத்தையும் பெற்றுக் கொண்டவர்களாவார்கள்.


பிறப்பும் வளர்ப்பும், நினைவாற்றல்

ஆயிஷா (ரழி) அவர்களின் தாய் வழியும், தந்தை வழியும் மக்காவின் மிகச் சிறந்த பிரபலமான நன்கறியப்பட்ட குலமாக இருந்த காரணத்தால், மக்காவின் செழிப்பு மிக்க குடும்பத்துப் பெண்ணாகப் பிறந்தார்கள். இவர்களது தாயார் உம்மு ருமான் (ரழி), தந்தையோ மிகப் பிரபலமான நபித்தோழரும், முதல் கலீபாவுமான அபுபக்கர் (ரழி) அவர்களாவார்கள். உம்மு ருமான் (ரழி) அவர்களது முதல் கணவரது பெயர் அப்துல்லா அஸ்தி, இவருக்குப் பிறந்த மகனின் பெயர் அப்துர் ரஹ்மான். உம்மு ருமானின் முதல் கணவர் இறந்ததன் பின்னர் அபுபக்கர் (ரழி) அவர்கள் இவரை மணந்து கொண்டார்கள். இவருக்கும் அபுபக்கர் (ரழி) அவர்களுக்கும் பிறந்த செல்வம் தான் ஆயிஷா (ரழி) ஆவார்கள். கி.பி. 614 ஆம் ஆண்டு ஆயிஷா (ரழி) அவர்கள் பிறந்தார்கள். இவரது தந்தையாரான அபுபக்கர் (ரழி) அவர்களைப் பற்றி திருமறைக் குர்ஆனில் இறைவன் மிகவும் போற்றி சிலாகித்துக் கூறியுள்ளான். அபுபக்கர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை முதன் முதலில் ஏற்றுக் கொண்ட நற்பேற்றைப் பெற்றவரும், இன்னும் மிகச் சிறந்த இறையச்சம் உடையவரும், இறைத்தூதர் (ஸல்) அவர்களது தூதுத்துவப் பணிக்காலத்தில், மக்கத்துக் குறைஷிகள் சொல்லொண்ணா துயரங்களைத் தந்த போது, அந்த இக்கட்டான தருணங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பக்க பலமாக இருந்த இறைநம்பிக்கையை வெளிப்படுத்தியவரும், இன்னும் தன்னுடைய உயிரை விட தூதர் (ஸல்) அவர்களின் உயிரை மதித்தவரும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உற்ற தோழருமாக ஆயிஷா (ரழி) அவர்களின் தந்தை அபுபக்கர் (ரழி) அவர்கள் இருந்த காரணத்தினால், அவரது புகழுக்கு ஏற்றவாறு ஆயிஷா (ரழி) அவர்களின் புகழும் மிகவும் கீர்த்தி மிக்கதுதான். இன்னும் ஆயிஷா (ரழி) அவர்களின் தந்தை அபுபக்கர் (ரழி) அவர்களின் மரணத்திற்குப் பின்னால் கூட தன்னுடைய ஆருயிர்த் தோழரான இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிக அருகில் அடக்கம் செய்யப்பட்ட நற்பேறுக்கு உரித்தானவராகவும் திகழ்ந்தார்கள். இன்னும் சுவனச் சோலைகளில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இணைந்து நுழையும் பாக்கியம் பெற்றவர்களுமாவார்கள்.

ஆயிஷா (ரழி) அவர்கள் ஐந்து வயதே நிரம்பிய சிறுமியாக இருந்த நேரமது. அப்பொழுது பொம்மைகளை வைத்து விளையாடுவது என்பது சிறுமிகளுக்கே உரிய பொழுது போக்கு மற்றும் விளையாட்டு என்ற அடிப்படையில், ஆயிஷா (ரழி) அவர்களும் இதில் விலக்காக இருக்கவில்லை, அக்கம் பக்கத்திலுள்ள சிறுமிகளுடன் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

ஒரு சமயம், ஆயிஷா (ரழி) அவர்கள் இறக்கை உள்ள குதிரையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கையில்,

என்ன ஆயிஷாவே! உங்களுடைய குதிரையில் இறக்கை முளைத்துள்ளது. குதிரைக்கு இறக்கை இருக்காதல்லவா என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கிண்டலாகக் கேட்டார்கள். துடிப்பும், வேடிக்கையும், நகைச்சுவை உணர்வும் கொண்ட சிறுமியாக இருந்த ஆயிஷா (ரழி) அவர்கள், அந்த இளம் வயதில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கிண்டலான பேச்சுக்கு இவ்வாறு பதில் கூறினார்கள்.

ஆம்! இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களிடம் இருந்த குதிரைகளுக்கு இறக்கை இருந்ததல்லவா! என்று பதில் கூறினார்கள்.

மேற்கண்ட சம்பவம் மூலம், ஆயிஷா (ரழி) அவர்கள் புத்திக் கூர்மையுள்ள, கேள்விகளுக்கு உடனுக்குடன் தக்க பதில் கொடுக்கக் கூடிய திறன், மார்க்கத்தைப் பற்றிய அறிவு, மற்றும் வரலாறு சம்பந்தமான அறிவு ஆகியவற்றை அந்த இளம் வயதிலேயே பெற்றிருந்த பாங்ககைக் காண முடியும்!

இன்னும் கம்ப்யூட்டர் போல மிகச் சிறந்த ஞாபக சக்தியைப் பெற்றிருந்தார்கள். அவர்கள் எந்த சம்பவத்தையும் மறந்ததாக குறிப்புகள் இல்லை. அவர் எதனையும் மறந்து விட்டார் என்று கூறுவதற்குக் கூட ஆதாரங்களில்லை.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து, புறப்பட்ட வேளையில் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களுக்கு எட்டு வயது தான் நிரம்பியிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் நடந்த சின்னச் சின்ன விசயங்களைக் கூட அன்னை அவர்கள் ஞாபகம் வைத்திருந்தார்கள். முதன் முதல் இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஒன்று மதீனாவில் உதயமான அந்த வேளையில் நடந்த அத்தனை வரலாற்றுச் சம்பவங்களையும் அன்னை அவர்கள் மிகவும் ஞாபகப்படுத்தி வைத்திருந்தார்கள்.


மணவாழ்க்கை

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கைத் துணைவியாக அவர்கள் வாழ்க்கைப் பட்ட பொழுது, அவர்களுக்கு ஒன்பது வயது தான் நிரம்பி இருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முழுக்க முழுக்க ஆதரவளித்து அரவணைத்துக் கொண்டிருந்த அன்னை கதீஜா (ரழி) அவர்களின் பிரிவினால் அண்ணலார் முஹம்மது (ஸல்) அவர்கள் வாடிக் கொண்டிருந்த சமயத்தில் தான் இந்தத் திருமணம் நடந்தது. அன்றைய அரேபியாவின் இரு பெரும் தலைமைக் குலங்களாகத் திகழ்ந்த கதீஜா (ரழி) மற்றும் அபூதாலிப் ஆகியோர்கள், மக்காவின் அத்தனை எதிர்ப்புகளிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள். இத்தகைய இருவரும் ஒரு சேர இறையடி சேர்ந்து விட, அந்த இக்கட்டான தருணங்களில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனிமையில் விடப்பட்டது போலவும், எதையோ இழந்து விட்டது போலவும் மிகவும் கைசேததுக்குரியவராக இருந்தார்கள். இன்னும் இவர்கள் இருவரும் இறந்ததன் பின்னர் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் மிகவும் கொடிய கொடூரமான கால கட்டத்தை மக்காவில் சந்திக்க ஆரம்பித்தார்கள்.

ஆயிஷா (ரழி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களது குடும்பத்தில் இணைந்த பொழுது, அவர்கள் மிகப் பெரிய அரண்மனை வாழ்க்கையை வாழவில்லை. மிகப் பெரிய அறையில் தங்;க வைக்கப்படவில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு அருகில் பனூ நஜ்ஜார் கோத்திரத்தார்கள் வசித்த இடத்திற்கு அருகில் கட்டப்பட்ட மிகச் சிறிய அறையில் தான் தனது மண வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை 6 அடி நீள அகலத்தையும், மண்ணால் ஆன தரையையும், ஓலையால் வேய்ந்த கூரையையும் கொண்டதாக இருந்தது. மழை நீர் வீட்டினுள் விழாமல் இருப்பதற்கு துணியால் மூடப்பட்டிருந்தது. இன்னும் அந்த அறைக்கு ஒரே ஒரு கதவு தான் இருந்தது. அந்தக் கதவு என்றுமே மூடப்பட்டதுமில்லை. அந்தக் கதவில் மறைப்புக்காக ஒரு துணி ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். அந்த அறையை அடுத்து ஒரு அறை சற்று உயரமாக இருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நம்பிக்கையாளர்களின் தாய்மார்களை விட்டும் ஒதுங்கி இருந்த கால கட்டத்தில் இந்த அறையில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனித்திருந்தார்கள். அறையின் உயரம் ஒரு ஆள் நிற்கும் அளவு உயரம் தான் இருந்தது. அந்த அறையில் பாய் ஒன்றும், தட்டு ஒன்றும், தோளால் ஆன தண்ணீர்ப் பை ஒன்றும், மரச் சிறாய்கள் வைத்து தைக்கப்பட்ட தலையணை ஒன்றும் தான் அந்த வீட்டின் சொத்தாக இருந்தது. இதனைத் தவிர்த்து, இந்த உலக வாழ்வை ஞாபகப்படுத்தக் கூடிய பொருட்கள் எதுவும் கிடையாது, இன்னும் மறுமையை ஞாபகப்படுத்தும் பொக்கிஷங்கள் தான் அங்கே காணப்படக்கூடியதாக இருந்தது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களும் இந்த உலக வாழ்வின் ஆடம்பரங்களை விரும்பவில்லை. மாறாக, மரணத்தின் பொழுது ஏழையாகவே மரணிக்க விரும்பினார்கள். இன்னும் உயிர் கொடுத்து எழுப்பப்படக் கூடிய அந்த மறுமை நாளிலே, ஏழைகளுடனும், தேவையுடையவர்களுடனுமே எழுப்பப்பட வேண்டும் என்று தான் அவர்களது பிரார்த்தனையும் இருந்தது.


அன்னையவர்களின் தயாள குணம்

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது மற்றும் அவர்களது தேவைகளைச் செய்து கொடுக்கும் பொறுப்பாளராக பிலால் (ரழி) அவர்கள் இருந்தார்கள். இன்னும் அன்னையவர்களுக்கு தேவையான பொருளாதார உதவிகளைக் கூட பிலால் (ரழி) அவர்களிடம் பெற்றுக் கொண்டு, தங்களது தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் வசதி கூட அவர்களுக்கு இருந்தது. இன்னும் அன்றைய அரேபியாவின் முழு ஆட்சிப் பொறுப்பும் இஸ்லாத்திடம் இருந்து கொண்டிருந்தது. இஸ்லாமிய அரசின் நிறைசேரி என்றழைக்கக் கூடிய நிதியமைச்சகத்துக்கு நாடெங்கிலும் இருந்து பொருள்களும், செல்வங்களும், தானியங்களும் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. ஆனால், மிகப் பெரிய சாம்ராஜ்யத்திற்குச் சொந்தக்காரராக இருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்த தினத்தன்று, அவர்களது வீட்டில் சமைக்கக் கூடிய தானியங்கள் இல்லாத நிலை தான் இருந்தது.

இந்த உதாரணமிக்க வாழ்வை ஆயிஷா (ரழி) அவர்கள் தங்களது இறுதி நாட்கள் வரை கூடக் கடைபிடித்து வாழ்ந்தார்கள். தனக்கு உதவிப் பணமாக நிதியமைச்சகத்திலிருந்து வரும் பணத்தை ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் செலவிடக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்களது இல்லத்துக்கு வந்து திரும்பும் எந்த ஏழையும் வெறுங் கையுடன் திரும்பியதில்லை.

இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிவடைந்து தினமும் நிதியமைச்சுக்கு பொருள்களும், செல்வங்களும் குவிந்து கொண்டிருந்த நிலையில், அன்னையவர்கள் நினைத்திருந்தால் மிகச் சிறந்த செல்வச் செழிப்பு மிக்க வாழ்வை வாழ்ந்திருக்க முடியும். ஆனால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வாழ்வை, தனது இறுதிக் காலம் வரைக்கும் கடைபிடித்து வாழ்ந்து வந்தார்கள்.

அப்துல்லா பின் ஜுபைர் (ரழி) அவர்கள் அன்னை ஆயிஷா (ரழி) மற்றும் அன்னையின் உடன் பிறந்தாளான அஸ்மா (ரழி) ஆகிய இருவரது கொடைத்தன்மையை இங்கு நமக்கு நினைவு இவ்வாறு நினைபடுத்துகின்றார்கள்.

அவர்கள் பெறுகின்ற அனைத்து செல்வங்களையும் அல்லாஹ்வின் பெயரால் தானம் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு செல்வம் சேர்ந்தவுடன் அவற்றை தேவைப்படுகின்ற ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கக் கூடியவர்களாகவும், அதே நேரத்தில் அஸ்மா (ரழி) அவர்கள் அவ்வப்பொழுது சேர்ந்த பணத்தை தானமிடக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். அஸ்மா (ரழி) அவர்களோ, தான் கடன் வாங்கும் நிலையில் இருந்து கொண்டிருக்க நிலையில் கூட, யாராவது எதையாவது கேட்டு வந்து விட்டால் தன்னிடம் இருப்பவற்றைக் கொடுத்து விடக் கூடியவர்களாக இருந்தார்கள். அப்பொழுது, நீங்களே கடன் வாங்கும் நிலையில் இருக்கும் பொழுது, எதற்கு பிறருக்கு வழங்குகின்றீர்கள் என்று பிறர் கேட்கும் பொழுது, திருப்பிச் செலுத்துகின்ற எண்ணத்துடன் வாங்கும் கடனை அடைப்பதற்கு அல்லாஹ் உதவி புரிவதாக வாக்களித்திருக்கின்றான் அல்லவா! என்று கூறுவார்களாம். இன்னும் நான் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என்றும் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

ஒரு சமயம், தன்னிடம் இருந்த 70 ஆயிரம் திர்ஹம்களை ஒரே நேரத்தில் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டார்கள் அன்னையவர்கள். அப்பொழுது அவர்களது கைத்துண்டு தான் அவர்களிடத்தில் மிச்சமிருந்தது. இன்னும் ஒரு மாலைப் பொழுதில் அவர்களுக்கு ஒரு லட்சம் தினார்களை முஆவியா (ரழி) அவர்கள் சிரியாவிலிருந்து அனுப்பி வைத்தார்கள். அதனை அப்பொழுதே தானமாக மக்களுக்கு வழங்கி விட்டார்கள். அப்பொழுது, அவர்களுக்கு பணிப்பெண்ணாக இருந்த பெண்ணொருத்தி, அன்னையவர்களே..! நீங்கள் இன்றைக்கு நோன்பு வைத்துள்ளீர்கள், உங்களுக்காக எதையாவது ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிய பொழுது, நீங்கள் எனக்கு ஏன் இதனை முன்பே தெரியப்படுத்தவில்லை என்று தான் கேட்டார்கள். இன்னும் ஒரு முறை அப்துல்லா பின் ஜுபைர் (ரழி) அவர்கள் ஒரு லட்சம் திர்ஹம்களை அனுப்பி வைத்தார்கள். அது வந்த வேகத்தில் தானமாக வழங்கப்பட்டு விட்டது அன்னையவர்களால்..!

ஒரு நாள் அன்னையவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். அப்பொழுது ஒரு ஏழைப் பெண் தானமாக எதனையாவது பெற்றுக் கொள்ளும் நோக்கில் அன்னையவர்களின் வீட்டுக்கு வந்திருந்தாள். அப்பொழுது அன்னையவர்கள் தனது பணிப் பெண்ணை நோக்கி, நம்மிடம் இருக்கின்ற அந்த துண்டு ரொட்டியை எடுத்து அந்தப் பெண்ணுக்குக் கொடுக்குமாறு கூறினார்கள். அந்தப் பணிப் பெண்ணோ, அன்னையே..! நீங்கள் நோன்பு திறப்பதற்கு இந்த ரொட்டித் துண்டை விட்டால் நம்மிடம் எதுவும் கிடையாது என்று கூறினார்கள். அதற்கு அன்னையவர்கள், அவளோ பசியென்று நம் வீடு தேடி வந்து நிற்கின்றாள். முதலில் அவளது பசியைப் போக்குவோம். மாலையில் நம் பசியைப் போக்க இறைவன் வேறு எதாவதொரு ஏற்பாட்டைச் செய்வான் என்று கூறினார்கள். அன்றைய மாலைப் பொழுதில், நோன்பு திறக்கும் நேரத்தில் ஒரு வீட்டிலிருந்து அன்னைக்காக சமைத்த இறைச்சித் துண்டு வந்திருந்தது. அப்பொழுது, பார்த்தாயா பெண்ணே..! நாம் காலையில் தானம் கொடுத்ததை விடச் சிறந்த உணவை அல்லாஹ் நமக்காக ஏற்பாடு செய்து தந்திக்கின்றான் என்று கூறினார்கள். முஆவியா (ரழி) அவர்களுக்கு விற்ற வீட்டில் தான் அன்னையவர்கள் இருந்தார்கள், இன்னும் தனக்கு வருகின்ற பரிசுப் பணம், உதவிப் பணம் ஆகியவற்றை அல்லாஹ்வின் நேசத்திற்காக அனைத்தையும் தானம் வழங்;கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இன்னும், தனது அக்காள் அஸ்மா (ரழி) அவர்களது மகனான அப்துல்லா பின் சுபைர் (ரழி) அவர்கள் மீது அளப்பரிய பாசம் கொண்டிருந்தார்கள். அதன் காரணமாக அப்துல்லா பின் சுபைர் (ரழி) அவர்களும் தனது சிறிய தாயார் மீது அளப்பரிய பாசத்தை வைத்திருந்ததோடு, அவர்களின் தேவையை நிறைவு செய்து உதவி வந்தார்கள்.

ஒருமுறை, அன்னையவர்கள் மித மிஞ்சி தான தர்மங்கள் வழங்கி வருவதையிட்டு, அப்துல்லா பின் சுபைர் (ரழி) அவர்கள் ஏதோ ஒரு விமர்சனமான வார்த்தைகளை, அன்னையவர்களைப் பற்றிக் கூறி விடுகின்றார்கள். அதனைக் கேட்ட அன்னையவர்கள் மிகவும் கோபம் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் எனது பொருள்களைச் செலவழிப்பதை விமர்சனம் செய்வதற்கும், அதனைத் தடுப்பதற்கும் இந்தப் பூமியில் யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. அவர் எவ்வாறு இப்படிப்பட்ட விமர்சனத்தைச் சொல்லலாம். இனி ஒரு போதும் நான் அப்துல்லா பின் சுபைர் (ரழி) அவர்களிடம் பேச மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டார்கள். பின் அவர்களது கோபம் தணிந்தது. தனது தவறை நினைத்து, அதற்குப் பிராயச்சித்தமாக சத்தியமிட்டதற்குப் பகரமாக பல அடிமைகளை விடுதலை செய்தார்கள்.

இன்னும் அன்னையவர்கள் மிகவும் இளகிய மனதுடையவர்கள், எளிதில் அவர்களது கண்கள் கண்ணீரைச் சொறிந்து விடும் அளவுக்கு இளகிய மனதுடையவர்கள். ஒரு சமயம் ஒரு பெண் தனது இரு குழந்தைகளுடன் அன்னையின் வீட்டு வாசலில் தானம் கேட்டு வந்து நின்றார். அப்பொழுது அன்னையவர்களிடம் மூன்று பேரீச்சம் பழங்கள் தான் இருந்தது. அதனை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்தார்கள், அதனைப் பெற்றுக் கொண்ட அந்தப் பெண் - தனது குழந்தைகளுக்கு முறையே ஒரு பழத்தைக் கொடுத்து விட்டு, ஒன்றைத் தானும் வாயில் போட்டுக் கொண்டாள். அதில் ஒரு குழந்தை தனக்குக் கொடுக்கப்பட்ட பழத்தை மிக வேகமாகத் தின்று முடித்து விட்டு, தாய் அசை போட்டுக் கொண்டிருக்கும் வாயையே பார்த்துக் கொண்டிருந்தது. தனது குழந்தைகளின் அகோரப் பசிப் பிணியை அறிந்த அந்தத் தாய், தனது வாயிலிருந்த பழத்தை வெளியில் எடுத்து, இரு குழந்தைகளுக்கு ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொடுத்தாள். அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அன்னை ஆயிஷா (ரழி) அவர்களால் தாங்க இயலாமல், அழுதே விட்டார்கள். அவர்களால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கி விட்டார்கள். 

 
களங்கம் சுமத்தியவர்களை இனங்காட்டினான் இறைவன்

 
அன்னையவர்களது வாழ்வு பரிசுத்தமானது, இறையச்சம் மிகுந்தது, இருப்பினும் அவர்கள் கூட நயவஞ்சகர்களின் சதித் திட்டத்திலிருந்து தப்பிக்க இயலவில்லை. ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு ஷஃபான் மாதம் கதீத் என்ற இடம் நோக்கி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது படையணியை நடத்திச் சென்று கொண்டிருந்தார்கள். பனூ முஸ்தலக் என்ற கோத்திரத்தாருக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களது படைக்கும் இடையே சிறியதொரு போர் ஒன்று நடந்தது. இந்தக் குறிப்பிட்ட போரின் பொழுது, இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பல நயவஞ்சகர்கள் சேர்ந்து வந்திருந்தார்கள். அந்தப் போரின் பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்களது படை மரீஸா என்ற ஆற்றின் கரையை அடைந்த பொழுது, அங்கு சிறிது தங்கி இளைப்பாறி விட்டுச் சென்றார்கள்.

அந்தப் போரின் பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் வந்திருந்த ஆயிஷா (ரழி) அவர்களுக்கு 19 வயது நிரம்பியிருந்தது, இன்னும் அவர்கள் மிகவும் ஒல்லியாக இளைத்துமிருந்தார்கள். அப்பொழுது, தனது அக்காளான அஸ்மா (ரழி) அவர்களிடமிருந்து ஒரு கழுத்து மாலை ஒன்றை இரவல் வாங்கி அணிந்து வந்திருந்தார்கள். பாலைவன நடுவே படைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பொழுது, தனது சிறு தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு அன்னையவர்கள் ஒதுக்குப்புறமான இடம் தேடிச் சென்று விட்டார்கள். திடீரென தான் அணிந்திருந்த கழுத்து மாலையைக் காணாத அன்னையவர்கள், தான் வந்த வழியில் எங்கேயேனும் விழுந்திருக்கக் கூடும் என்று நினைத்து, வந்த வழியே திரும்பி தேடிச் செல்ல ஆரம்பித்தார்கள். இந்த நேரத்தில் அவர்கள், தனது இருப்பிடத்திற்கு மீண்டும் திரும்பி வந்து பார்த்த பொழுது, படைகள் அந்த இடத்தை விட்டும் சென்று விட்டிருந்தன.

அந்தக் காலப் பழக்கம் எவ்வாறிந்ததென்றால் பெண்கள் ஆண்களிடமிருந்து தனித்து வைக்கப்படுவார்கள். இன்னும் பெண்கள் ஒட்டகத்தின் மீது பயணம் செய்யும் பொழுது, அவர்கள் பெட்டி போன்ற பரிகையில் அமர்ந்து பயணம் செய்வார்கள். அந்தப் பெட்டியில் திரைச் சீலைகள் தொங்க விடப்பட்டிருக்கும். இதனால் ஆண்கள் அவர்களைப் பார்ப்பது தவிர்க்கப்பட்டிருந்தது. படைகள் கிளம்பும் பொழுது, ஒட்டகத்தை ஓட்டி வரக் கூடியவர்கள், பெண்கள் உட்கார்ந்திருக்கக் கூடிய அந்தப் பெட்டியை ஒட்டகத்தின் மீது தூக்கி வைக்க, ஒட்டகம் பின் எழுந்து தனது பயணத்தைத் துவங்கும். அது போல ஆயிஷா (ரழி) அவர்கள் அமர்ந்து வந்த பெட்டியும் தூக்கி வைக்கப்பட்டது. ஆனால் ஆயிஷா (ரழி) அப்பொழுது, மிகவும் இளைத்திருந்த காரணத்தால், பெட்டியைத் தூக்கி வைத்தவர்களுக்கு, உள்ளே ஆள் இருக்கின்றதா? அல்லது இல்லையா என்பதை அறிய இயலாதிருந்தது. எனவே, ஆள் இல்லாமலேயே பெட்டி தூக்கி வைக்கப்பட்டு, படைகள் அந்த இடத்தை விட்டும் நகர்ந்து வெகு தூரம் சென்று விட்டன. இந்த நிலையில், கழுத்து மாலையைத் தேடி விட்டு, திரும்பி வந்த அன்னையவர்கள் படையைக் காணாது, தன்னைக் காணாது மீண்டும் அவர்கள் தன்னை இதே இடத்திற்கு தேடி வருவார்கள் என நினைத்து, பயப்படாமல் அந்த இடத்திலேயே உட்கார்ந்து விட்டார்கள்.

அன்றைய தின வழக்கப்படி, படைகள் விட்டுச் சென்ற பொருட்களை எடுத்து வருவதற்காகவே ஒருவரை நியமித்து வைத்திருப்பார்கள். இவர் படைகள் கிளம்பிச் சென்றவுடன் மிகவும் தாமதமாக அந்த இடத்தை விட்டும் கிளம்பி வருவார். அவ்வாறு அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் தான் சஃப்வான் பின் முஅத்தல் (ரழி) என்பவர். இவர் படைகள் எதனையும் விட்டுச் சென்றிருக்கின்றார்களா என்று அந்த இடத்தில் தேடிக் கொண்டு வரும் பொழுது, ஹிஜாப் அணிந்த நிலையில் ஒரு உருவம் ஒன்று, அங்கு தரையில் படுத்துக் கிடப்பதைக் காண்கிறார்கள். தரையில் படுத்துக் கிடப்பது பெண் என்று தெரிந்ததும், சஃப்வான் (ரழி) அவர்கள் சற்று ஒதுங்கி நின்று, தனது ஒட்டகத்தை ஓட்டும் தொணியில் குரல் கொடுக்கின்றார்கள். அந்தக் குரலைக் கேட்டு படுத்திருக்கும் பெண் எழும்பட்டும் என்று தான் அவர்கள் அவ்வாறு செய்தார்கள். ஒட்டகத்தை அதட்டும் குரழின் ஒலியைக் கேட்ட அன்னையவர்கள் விழித்தெழுந்தார்கள். பின் அந்த ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து உட்கார, சஃப்வான் (ரழி) அவர்கள் அந்த ஒட்டகத்தை கையில் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள்.

அன்றைய தினம் மதிய வேளையில் இன்னொரு இடத்தில் படையணி தங்கக் கூடாரம் அடித்துக் கொண்டிருந்த பொழுது, ஆயிஷா (ரழி) அவர்கள் சஃப்வான் (ரழி) அவர்களுடன் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். இன்னும் அனைத்து படைவீரர்கள் முன்னிலையிலும் அந்த ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கினார்கள். இந்தக் காட்சி, குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று வந்திருந்த நயவஞ்சகர்களுக்கு அவல் கிடைத்தது போலாகி, அவர்கள் அனைவரும் அப்துல்லா பின் சலூல் என்ற நயவஞ்சகனின் தலைமையில் தங்களது சதித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள். இவனுக்கென்றே தனியானதொரு குணம் உண்டு. அந்த கேடு கெட்ட குணத்தை வைத்து, சந்தேகத்தையும், கிசுகிசுக்களையும் ஆயிஷா (ரழி) அவர்கள் மீது கதை கட்டி, முஸ்லிம் படைகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த ஆரம்பித்தான்.

இந்த கிசுகிசு மதீனாவின் அனைத்து வீதிகளிலும் ஒலிக்க ஆரம்பித்தது. இந்த கிசுகிசுவில் ஹஸன் பின் தாபித், ஹம்னா பின் ஜஹ்ஸ், மற்றும் மஸ்தா பின் அதாதா ஆகியோரும் முன்னணியில் இருந்தார்கள். அந்தக் கிசுகிசுவில் ஆயிஷா (ரழி) அவர்களின் கற்பின் மீது களங்கத்தைச் சுமத்தி பேசப்பட்டது (இறைவன் பாதுகாப்பானாக!). நயவஞ்சகர்கள் தங்களது நயவஞ்சகச் சேற்றை அன்னை மீது வாறி இறைத்த வண்ணமிருந்தார்கள். மேலும், இந்த கிசுகிசுக்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களது காதிற்கும் எட்டியது. தனது குடும்பத்துப் பெண், இன்னும் தனது பிரியமான மனைவியின் மீது களங்கம் சுமத்தப்படுத்திப் பேசப்படுவது, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அதிகமான சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனால் தன்னைச் சுற்றி நடக்கின்ற இந்த அநாகரீக செயல்கள் எதனையும் அறியாதவர்களாக மதீனாவில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தில் ஆயிஷா (ரழி) தனது கடமைகளைச் செய்து வந்தார்கள்.

ஒருநாள் இரவு, வயதான மஸ்தா பின் அதாதா (ரழி) அவர்களுடன் ஆயிஷா (ரழி) அவர்கள் தனது சிறு தேவைகளை நிறைவேற்றும் நோக்குடன் மதீனாவின் ஒதுக்குப் புறமான இடத்திற்குச் சென்ற பொழுது, தனது மகனின் கேடு கெட்ட செயலை மனதில் வைத்துக் கொண்டு, தனது மகனைக் குறித்து சாபமிட்டுக் கொண்டே வருகின்றார். அதனைக் கேட்ட ஆயிஷா (ரழி) அவர்கள், ஏன் நீங்கள் உங்கள் மகன் மீது சாபமிடுகின்றீர்கள், அவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய தோழரும், இன்னும் பத்ருப் போரில் கலந்து கொண்ட நற்பேற்றுக்கும் உரியவராவார், நீங்கள் எச்சரிக்;கையுடன் உங்கள் மகனைப் பற்றிப் பேசுங்கள் என்று கூறுகின்றார்கள். தனது மகனின் இழி செயலைக் குறித்து விசனப்பட்ட அந்தத் தாய், இந்தப் பிரச்னையை ஆயிஷா (ரழி) அவர்களது காதுகளுக்குக் கொண்டு செல்கின்றார்.

தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருப்பவைகள் குறித்து எதுவுமே அறியாதிருந்த அன்னையவர்கள், தனது காதில் விழுந்த அந்த செய்தியைக் கேட்டவுடன், தன்னைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் சதிவேலைகளை அறிந்தவுடன் அன்னையால் தாங்க முடியவில்லை. அவர்களது முகம் வெளிறிப் போனது. விரைவாக வீடு வந்து சேர்ந்த அன்னையவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தனது தாய், தந்தையரைப் பார்த்து வருவதாகக் கூறி அனுமதி பெற்றுக் கொண்டு, நேரே தனது தாய் வீட்டிற்கு வந்து விடுகின்றார்கள். மதீனாவில் உலவி வந்த இந்த கிசுகிசுக்களை அவர்களும் கேட்டிருந்த காரணத்தினால், அன்னையவர்கள் அணையுடைத்த வெள்ளம் போல அழ ஆரம்பித்து விட்டார்கள். அன்னையவர்களின் பிரியத்திற்குரிய தாயார் தனது மகளின் நிலையை அறிந்து, அவரைத் தேற்ற முயன்றும் அவர்கள் தோற்றுத்தான் போனார்கள். அன்னையவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாய் ஓடிக் கொண்டிருந்தது.

நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பிரியத்திற்குரிய மனைவியாக இருக்கின்ற காரணத்தினால், உங்கள் மீது பொறாமை கொண்டவர்கள் தான் இந்த களங்கத்தைச் சுமத்தி இருக்கின்றார்கள். எனவே, அழ வேண்டாம், எல்லாம் விரைவில் சரியாகி விடும் என்று அந்த அன்னையவர்கள் வீடு தேடி வந்த தனது மகளான ஆயிஷா (ரழி) அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். ஆனால், தூய்மையான வாழ்வுக்குச் சொந்தக்காரரான அன்னையவர்கள் எந்த ஆறுதல் வார்த்தைகளையும் செவி கொடுத்துக் கேட்கும் நிலையில் இல்லை. தன் மீது களங்கம் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில் தன்னால் எவ்வாறு அமைதியாக இருக்க முடியும், மனதில் பாரத்தை வைத்துக் கொண்டு எவ்வாறு நிம்மதி அடைய முடியும் என்றார்கள். இரண்டு நாட்கள் இரவும் பகலும் அழுது கொண்டே இருந்ததன் காரணமாக அன்னையின் உடல் நலிவடைந்திருந்தது.

மூன்றாம் நாள் அன்னையவர்களின் தாய் மற்றும் தந்தை அபுபக்கர் (ரழி) அவர்களும் வீட்டில் அமர்ந்து கொண்டு தங்களது ஆசை மகளுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வருகின்றார்கள்.

ஆயிஷாவே! நீங்கள் தவறிழைத்திருக்கும் பட்சத்தில் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடிக் கொள்ளுங்கள் என்று அமைதியான குரழில் அன்னைக்கு அறிவுரை கூறினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

கண்ணில் நீர் வற்றியிருந்த கண்களோடு சோகத்துடன் இருந்த அன்னையவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு பதில் அளிக்க அனுமதி வழங்குமாறு தன் தாயிடம் கேட்கின்றார்கள். ஆனால் அன்னையின் தாயார் அவர்களோ எந்தப் பதிலையும் கூறாது அமைதியாக இருக்கின்றார்கள். பின்

இறுதியாக, அன்னையவர்கள் தனது ஆருயிர்க் கணவரைப் பார்த்துக் கூறினார்கள், நான் தவறிழைத்திருக்கவில்லை என்று சொல்லி மறுத்தால், எனது சொல்லை யாரும் நம்பும் நிலையில் இல்லை. ஆனால் நான் குற்றமற்றவள், அல்லாஹ் மட்டுமே இதனை அறிவான் என்று கூறி விட்டு, என் மீது சுமத்தப்பட்ட களங்கத்திற்குச் சரியான பதில் இதுவாகத் தானிருக்கும் என்று, யூசுப் (அலை) அவர்களது தந்தை அளித்த பதிலாக வருகின்ற, யூசுப் அத்தியாயத்தின் கீழ்க்கண்ட வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள். தனது தந்தையை நோக்கி, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு நான் பதில் அளிப்பதற்கு எனக்கு அனுமதி தாருங்கள் என்று கேட்க, அபுபக்கர் (ரழி) அவர்களோ வந்திருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆயிஷா (ரழி)அவர்கள் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அனுமதியும் வழங்கவில்லை.


எனவே (எனக்கு இந்நிலையில் அழகிய) பொறுமையை மேற்கொள்வதே நலமாக இருக்கும்; மேலும், நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்'' என்று கூறினார். (12:18)
அன்னையவர்கள் இருந்த நிலையில், யூசுஃப் (அலை) அவர்களது தந்தையாரான யஃகூப் (அலை) அவர்களது பெயரைக் கூட ஞாபகப்படுத்த முடியாத அளவுக்கு மனதால் மிகவும் நொந்து போய் இருந்தார்கள். இந்த கணத்தில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு கீழ்க்காணும் வசனம் இறக்கி அருளப்பட்டு, அன்னையவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை இறைவன் அறிவித்துக் கொடுத்தான்.

இந்த வசனம் அருளப்பட்ட பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் புருவங்களைச் சுற்றியும் வியர்வை முத்துக்கள் பணித்திருந்தன. பின் ஆயிஷா (ரழி) அவர்களின் பக்கம் திரும்பியவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கீழ்க்காணும் வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.
எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது. மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு. (24:11)

முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, ''இது பகிரங்கமான வீண் பழியேயாகும்'' என்று கூறியிருக்க வேண்டாமா? (24:12)

அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள். (24:13)

இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும். (25:14)

இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும். (25:15)

இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, ''இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்'' என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா? (24:16)

நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான். (24:17)

இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான்; மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; விவேகம் மிக்கோன். (24:18)

எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு. அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள். (24:19)

இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை தீண்டியிருக்கும்.) மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையயோனாகவும் இருக்கின்றான். (24:20)

ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையயடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் துய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (24:21)


மேலே கண்ட இறைவசனம் இறங்கியதன் பின், தங்களது செல்வத்தின் மீது சுமத்தப்பட்ட களங்கம் பொய்யென்று இறைவனால் நிரூபிக்கப்பட்டு விட்டது குறித்தும், தனது மகளின் நிலை கண்டு, இறைவன் திருவசனத்தை இறக்கியது குறித்தும், அன்னையவர்களின் பெற்றோர்கள் அகமகழிந்து போனார்கள். நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

ஆயிஷாவே! நீங்கள் உங்கள் கணவரிடம் சென்று நன்றி கூறுங்கள்..! என்று கூறிய பொழுது, நான் அல்லாஹ்வுக்குத் தான் நன்றிக் கடன் பட்டிருக்கின்றேன் என்று பதில் கூறி, அல்லாஹ் தான் என்மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைத்தெறிந்தான். இன்னும் எனது கண்ணியத்தைக் காக்கும் பொருட்டு தனது வசனங்களை இறக்கி அருளியமைக்காக அல்லாஹ் தான் என் நன்றிக்கு உரியவன் என்று பதிலளித்தார்கள். இன்னும் இந்த வசனங்கள் மறுமை நாள் வரை ஒலிக்கும். இந்த வரலாற்றுச் சம்பவம், இஸ்லாமிய வரலாற்றில் உஃபுக் என்றழைக்கப்படுகின்றது.

மதிப்பும் கௌரவமும்

இந்த சம்பவத்திற்குப் பின்பாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் மீது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வைத்திருந்த பிரியம் இன்னும் அதிகமாயிற்று. ஒருமுறை அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களே! இந்த உலகத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான நபர் யாராக இருக்கும்? என வினவிய பொழுது, ஆயிஷா (ரழி) அவர்கள் தான் இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தமான நபர் என்று பதிலளித்தார்கள். பின்பு, ஆண்களில் யார் என வினவிய பொழுது, அபுபக்கர் சித்தீக் (ரழி) என்று பதிலளித்தார்கள்.

ஒருமுறை உமர் (ரழி) அவர்கள் தனது மகளும், இறைத்தூதர் (ஸல்) அவர்களது மனைவியுமான ஹப்ஸா (ரழி) அவர்களிடம், ஆயிஷா (ரழி) அவர்களுடன் போட்டி போட வேண்டாம் என்றும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருக்கின்றார்கள் என்றும், அவரைக் குறைத்துமதிப்பிடாது கௌரவமாக உயர்ந்த அந்தஸ்துடன் கண்ணியத்துடன் பழகி வரும்படி அறிவுரை கூறினார்கள்.

இதன் காரணமென்னவெனில், அன்னையவர்கள் இஸ்லாமிய மார்க்க அடிப்படைச் சட்டங்களிலும், அதன் விளக்கத்திலும் தன்னிகரற்ற அறிவு ஞானத்தைப் பெற்றிருந்ததேயாகும்.

இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களைப் பேச விட்டு ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஒருமுறை ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த வீரர்கள், அம்புகளை எறிந்து கொண்டு தங்களுக்குள் வீர விளையாட்டு ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதனை அன்னையவர்கள் பார்க்க விரும்பிய பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னிற்க அவர்களுக்குப் பின் அன்னையவர்கள் மறைந்து நின்று கொண்டு, பிறர் தன்னைக் கவனிக்காதவாறு விளையாட்டைக் கண்டு ரசித்தார்கள். அந்த விளையாட்டு முடியும் வரைக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த இடத்தை விட்டும் நகரவில்லை. இன்னும் இருவரும் தங்களுக்கிடையில் மாறி மாறி பல கதைகளைப் சொல்லிக் காட்டிக் கொள்வார்கள்.

கணவனும் மனைவியும் எவ்வாறு நட்புடன் வாழ வேண்டும் என்பதற்கு அன்னையவர்களின் வரலாறு மிகுந்த படிப்பினை மிக்கது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களது மனைவிமார்களுடனும், குடும்பத்தவர்களுடனும் பிரியத்துடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாலும், அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து அவர்கள் சிறிதும் கவனக் குறைவாக இருந்தது கிடையாது. தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்பட்டு விட்டால், தனக்கு அருகில் குடும்பத்தவர்கள் இருக்கின்றார்களே, அவர்களுடன் இருந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், பொழுது சந்தோசமாகக் கழிந்து கொண்டிருக்கின்றதே என்று எண்ண மாட்டார்கள். மாறாக, தங்களது குடும்பத்தவர்களுடன் தான் இதுவரை அமர்ந்திருந்தோமா என்று பிறர் நினைக்கும் அளவுக்கு, பாங்கு சொன்ன உடனேயே அந்த இடத்தை விட்டும் அகன்று பள்ளியை நோக்கி விரையக் கூடியவர்களாக இருப்பார்கள். குடும்பத்தவர்கள் மீதான அன்பு இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமையினின்று அவர்களைப் பராக்காக்கி விடாது.

அன்னையவர்களின் வரலாற்றில் இன்னுமொரு சம்பவம் அவர்களது மதிப்புக்கு மணி மகுடம் சூட்டியது போலாகி விட்டது. ஆம்! அன்னையவர்களின் காரணத்தால் அப்பொழுது ஒரு இறைவசனத்தை இறைவன் இறக்கி அருளினான். ஒரு பயணத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அபுபக்கர் (ரழி) மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் ஆயிஷா (ரழி) அவர்களும் அந்தப் பயணத்தில் உடன் சென்றிருந்தார்கள். பாலைவனத்தில் ஒரு இடத்தில் பயணத்தை இடை நிறுத்தி தங்கிக் கொண்டிருந்த பொழுது, அன்னையவர்களின் கழுத்து மாலை ஒன்று மீண்டும் காணாமல் போய் விட்டது. நபித்தோழர்கள் பலர் அந்த மாலையைத் தேடிச் சென்றும், அதனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது கூடாரத்தில் தங்கியிருந்தார்கள். அப்பொழுது அதிகாலைத் தொழுகைக்கு பாங்கும் சொல்லப்பட்டு விட்டது. ஆனால், அவர்கள் கூடாரம் அடித்துத் தங்கிய இடத்தில் அதிகாலைத் தொழுகைக்கு தங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள அங்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

நபித்தோழர்களோ அதிகாலைத் தொழுகைக்கு நேரமாகிக் கொண்டிருக்கின்றது, தண்ணீரும் அருகில் இல்லை, எங்கே தொழுகை தவறி விடுமோ என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் இந்த இக்கட்டான சூழ்நிலை ஏற்படுவதற்கு அன்னையவர்கள் தான் காரணம் என்றும், காரணம் கற்பித்துக் கொண்டிருந்தார்கள். நபித்தோழர்களிடம் காணப்பட்ட அந்த வருத்தத்தக்க நிலையைக் கண்ட அபுபக்கர் (ரழி) அவர்களோ, இந்த சூழ்நிலை உங்களால் தானே வந்தது என்று தனது மகளான அன்னை ஆயிஷா (ரழி) அவர்களைக் கடிந்து கொள்ளும் நிலைக்கு சூழ்நிலை இறுக்கமானது. அந்த நேரத்தில் தான் அன்னையவர்களின் காரணத்தால், இறைவன் கீழ்க்கண்ட வசனத்தை இறக்கி அருளினான் :

நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரைப் பெறாவிடின், சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி ''தயம்மும்'' செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். (4:43)

இதுவரைக்கும் அன்னையவர்களைக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்த நபித்தோழர்கள், மேற்கண்ட இறைவசனம் இறங்கியதன் பின்பு, இறைவன் தங்கள் மீது காட்டிய கருணையை எண்ணி மகிழ்ந்தவர்களாக, அன்னையவர்களின் காரணத்தால்தான் இந்த சலுகை எங்களுக்குக் கிடைத்தது என்று புகழ ஆரம்பித்து விட்டார்கள்.

சற்று முன்பு தனது மகளைக் கடிந்து கொண்ட அபுபக்கர் (ரழி) அவர்கள் கூட இப்பொழுது தனது மகள் மீது இறைவன் சொறிந்த கருணை மழையைக் கண்டு புன்னகை பூக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் கூறினார்கள் : இந்த இறைவசனம் இறங்கும் வரைக்கும், இவ்வளவு பெரியதொரு அருட்கொடையை எனது மகளின் காரணத்தால் இறைவன் இறக்கி அருளுவான் என்று நான் நினைக்கவில்லை, இந்த அருட்கொடை எமக்கு மட்டும் உரித்தானதல்ல, மாறாக, உலக இறுதி நாள் வரைக்கும் தொடர்ந்து வரக் கூடியதல்லவா என்று தனது மகளுடன் இறைவன் இருந்து கொண்டிருக்கின்றான் என்பதை இட்டு எண்ணி எண்ணி அபுபக்கர் (ரழி) அவர்கள் மகிழ்ந்தார்கள். இன்னும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தவர்களாக, தனது மகளுக்கு இறைவன் நீடித்த ஆயுளை வழங்க வேண்டும் என்றும், அதன் மூலம் இந்த முஸ்லிம் உம்மத் எண்ணற்ற அருட்கொடைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பிரார்த்தித்தார்கள்.

அன்றைய தினத்தினுடைய அதிகாலைத் தொழுகை நிறைவடைந்து, பயணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, கிளம்பிய ஒட்டகங்களின் ஒன்றின் கீழாக இருந்து, காணாமல் போன கழுத்து மாலை கண்டெடுக்கப்பட்டும் விட்டது.

பிரிவும், பதிலும்

ஹிஜ்ரி 9 ம் வருடம், இஸ்லாம் அரபுப் பிரதேசத்தையும் தாண்டி தனது ஆட்சிப் பரப்பை அதிகரித்துச் சென்று கொண்டிருந்தது. இஸ்லாத்தை ஆறத் தழுவிக் கொண்ட அரபுப் பூமியின் புதிய தலைநகராக மதீனத்துந்நபவி திகழ்ந்து கொண்டிருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக, மிகவும் வசதி வாய்ப்புகளுடனும் வாழ்ந்திருந்த மனைவிமார்கள் சிலர், இப்பொழுது மதீனாவில் காணப்படும் செல்வச் செழிப்புக்கு ஈடாக தங்களுக்குக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் செலவுத் தொகைகள் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்களது மனைவிமார்களது உலகாதாய நோக்கம் கொண்ட இந்த கோரிக்கை இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சங்கடப்பட வைத்தது, கவலை கொள்ளச் செய்தது.

இதன் காரணமாக எந்த மனைவியரிடத்திலும் சேர்ந்திருப்பதில்லை என்று உறுதி பூண்டவர்களாக ஆயிஷா (ரழி) அவர்களது வீட்டினை ஒட்டிய அறையில் தங்கிக் கொண்டார்கள். இந்த கால கட்டத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குதிரையில் இருந்து தவறி விழுந்ததன் காரணமாக சிறு காயமும் ஏற்பட்டிருந்தது. இந்த சூழ்நிலை இறைத்தூதர் (ஸல்) அவர்களது குடும்பத்தவர்களிடையே சிறு சலனத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.

28 நாட்கள் முடிந்து, 29 ம் நாள் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தங்கியிருந்த அறைக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்து, ஆயிஷாவே! நான் சொல்வதைக் கேட்டுக் கொள்ளுங்கள். பின் உங்களது பெற்றோர்களிடம் ஆலோசனை கலந்து விட்டு உங்களது முடிவினைச் சொல்லுங்கள் என்று கூறியவர்களாக, இந்த உலக வாழ்க்கையின் கஷ்டங்கள், வறுமை ஆகியவற்றையா அல்லது வசதியான வாழ்க்கையா.., இந்த இரண்டில் எது வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதற்கு முன் இதுபற்றி உங்களது பெற்றோர்களுடன் கலந்தாலோசனை செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

இதனைக் கேட்ட ஆயிஷா (ரழி) அவர்களது மனதில் இருந்து பட்டென பதில் வந்தது. நானும் என்னுடைய குடும்பத்தவர்களும், தேவை ஏற்படும் எனில் எங்களது வாழ்வையே உங்களுக்காக அற்பணம் செய்வதற்குத் தயாராகவே இருக்கின்றோம். இது விசயத்தில் எனது குடும்பத்தவர்களுடன் கலந்தாலோசனை செய்வதற்கு எந்த அவசியமுமில்லை. நான் என்னுடைய வாழ்வை உங்களுடன் வாழ்வதற்கே விரும்புகின்றேன், இந்த உலக வாழ்க்கையின் ஆடம்பரங்களை அல்ல என்று அன்னையவர்கள் கூறி முடித்தார்கள். இந்த பதிலைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வதனத்தில் அழகிய புன்சிரிப்பு தவழ்ந்தது. அதன் பின் அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தை இறக்கி அருளினான் :

நபியே! உம்முடைய மனைவிகளிடம்; ''நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன். ''ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்'' என்றும் கூறுவீராக! (33:28-29)

ஆயிஷா (ரழி) அவர்களுடன் ஏற்பட்ட இந்த வாதங்கள் முடிவுற்ற பின், இறைத்தூதர் (ஸல்) அவர்களே! நீங்கள் என்னிடம் பெற்றுக் கொண்ட இந்த பதிலை நீங்கள் மற்ற மனைவியர்களிடத்தில் கூற வேண்டாம். அவர்கள் என்ன பதிலைச் சொல்கின்றார்கள் என்பதை நான் பார்க்க வேண்டும் என்று குலைந்தபடி ஆயிஷா (ரழி) அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களோ..! ஆயிஷாவே! நான் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியனாகத் தான் என்னுடைய இறைவனால் அனுப்பப்பட்டுள்ளேனே தவிர, அடக்குமுறையாளனாக அல்ல..! அவரவர் முடிவில் தலையிடும் அதிகாரம் எனக்கில்லை என்று கூறி முடித்தார்கள்.

பின் மற்ற மனைவியர்களிடத்தில் அவரவர் விருப்பம் என்னவென்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட பொழுது, அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் என்ன பதிலைக் கூறினார்களோ அதே பதிலையே மற்றவர்களும் கூற, மிக நீண்ட நாட்களாக வருத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த அந்தப் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்தது. மதீனாவைச் சூழ்ந்திருந்த இறுக்கமான சூழ்நிலை கலைந்து, மீண்டும் அமைதியும் மகிழ்ச்சியும் திரும்பியது.

வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களைக் காணும் பாக்கியம் பெற்றவர்கள்

ஒரு சமயம், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குதிரையின் மீது அமர்ந்திருந்த ஒரு மனிதரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். (இதனைப் பார்த்த ஆயிஷா (ரழி) அவர்கள்) இறைத்தூதர் (ஸல்) அவர்களே! யார் அந்த மனிதர்? என்று வினவினார்கள். ஆயிஷா (ரழி) அவர்களின் கேள்வியை ஆச்சரியத்துடன் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அந்த மனிதரை நீங்கள் பார்த்தீர்களா? என்று கேட்டு விட்டு, அவர் தான் ஜிப்ரீல் (அலை) அவர்கள், அவர்கள் மனித உருவில் வந்திருந்தார்கள், இன்னும் உங்களுக்கு அவர்கள் தனது ஸலாமை எத்தி வைத்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள் என்று கூறினார்கள். உடனேயே, யா அல்லாஹ்! எங்களது விருந்தினரும், இன்னும் உன்னுடைய கண்ணியமிக்க தூதுவருமான ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு நற்பேறுகளை வழங்குவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களது வீட்டில் தங்கியிருந்த சமயத்தில், ஜிப்ரீல் (அலை) அவர்கள் அங்கு வருகை தந்தது பற்றி அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கும் இந்த செய்தியில், ஒரு முறை ஆயிஷா (ரழி) அவர்களது வீட்டின் முன் முன்பின் அறியாத மனிதர் ஒருவர் நின்று கொண்டிருப்பதைப் பற்றி, தொழுது கொண்டிருந்திருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்து விட்டு, வீட்டுக்கு வெளியில் வந்து பார்க்கின்றார்கள், யாரை எதிர்பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காத்திருந்தார்களோ, அந்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் தான் அங்கு வந்து நின்று கொண்டிருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்களே! ஏன் நீங்கள் உள்ளே வர மறுக்கின்றீர்கள்..! உள்ளே வாருங்கள்..! என்று அழைக்கின்றார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்களோ, நாயும் இன்னும் உருவப் படங்களும் உள்ள இடங்களுக்கு நாங்கள் வர மாட்டோம் எனப் பதில் கூறுகின்றார்கள். பின்னர் வீட்டினுள் சென்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பார்த்த பொழுது, ஒரு பொம்மை வீட்டின் ஒரு மூலையில் கிடந்ததை அப்புறப்படுத்திய பின் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களது வீட்டினுள் நுழைந்தார்கள்.

நபிமொழி அறிவிப்பாளராக..!

இன்னும், அன்னையவர்களுக்கு இருந்த கல்வி ஞானத்தின் காரணமாக மிகச் சிறந்த உயர்ந்த அந்தஸ்திற்குரியவர்களாக திகழ்ந்தார்கள். மார்க்கத்தின் மிகவும் சிக்கலான பல கேள்விகளுக்கு பல நபித்தோழர்களும், பெண்களும் அன்னையிடம் வந்து அதற்கான விளக்கத்தையும் தெளிவையும் பெற்றுச் செல்லும் அளவுக்கு மார்க்க விசயங்களில் மிகவும் கற்றறிந்த மேதையாகத் திகழ்ந்தார்கள். இன்னும் ஸஹீஹான பல நபிமொழிகள் அன்னையின் மூலமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் வாழ்ந்த இன்னும் அவர்களுடன் எப்பொழுதும் இருந்து கொண்டிருந்த பல நபித்தோழர்களில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையை நமக்கு நபிமொழிகளாக அறிவித்த, இன்னும் தனிச்சிறப்பாக ஆயிரக்கணக்காக நபிமொழிகளுக்கு சொந்தக்காரர்களின் முதல் ஏழு நபித்தோழர்களின் வரிசையில் அன்னையவர்களும் இடம் பெற்றுள்ளார்கள்.

1. அபூஹுரைரா அப்துர் ரஹ்மான் பின் சகர் தோசி (ரழி) (5374 ஹதீஸ்கள்)

2. அப்துல்லா பின் உமர் பின் கத்தாப் (ரழி) – (2630 ஹதீஸ்கள்)

3. ஆயிஷா (ரழி) (2210 ஹதீஸ்கள்)

4. அப்துல்லா பின் அப்பாஸ் (ரழி) (1660 ஹதீஸ்கள்)

5. ஜாபிர் பின் அப்துல்லா அன்ஸாரி (ரழி) (1540)

6. சஅத் பின் மாலிக் அபூ ஸயீத் அல் குத்ரீ (ரழி) (1540)

7. அனஸ் பின் மாலிக் (ரழி) (2286)

மற்ற பெண்களைக் காட்டிலும் அன்னையவர்கள் கல்வி ஞானத்தில் தேர்ச்சி பெற்ற முதல் தர பெண்மணியாகத் திகழ்ந்தார்கள். அன்னையைப் பற்றி மதிப்பிட வேண்டும் என்றால், அவர்கள் தனது இளமைக் காலத்தில் அபுபக்கர் (ரழி) போன்ற உன்னதமிக்க மனிதரைப் பெற்றோராகவும், இன்னும் தனது மணவாழ்க்கையை மிக இள வயதில் ஆரம்பித்து அதனை இறைத்தூதர் (ஸல்) அவர்களுடனும் வாழ்ந்த காரணத்தினால் அவர்களது வாழ்க்கையே ஒரு பாடப் புத்தகமாகத் திகழ்ந்ததே, அவர்களைக் கல்விக் கடலாகப் பரிணமிக்கச் செய்தது. இன்னும் இறைவனின் தூய ஞான ஒளியானது அன்னைக்கு நேரடியாக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மூலமாகக் கிடைத்ததும், இன்னும் அவர்களுக்காக இறைவன் பல முறை பதில் தந்திருக்கின்றான், தனது திருவசனங்களை அன்னையின் காரணத்தால் அருள் செய்திருக்கின்றான் என்பதிலிருந்து, உலகத்துப் பெண்களில் அன்னையவர்கள் ஒலிக் கீற்றாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றால் அதில் மிகையில்லை.

கலீபாக்களின் ஆட்சிக் காலத்தில் அன்னையவர்களின் மார்க்க தீர்ப்புகள் (ஃபத்வாக்கள்) ஏற்றுக் கொள்ளப்பட்டன. சொத்துப் பங்கீடு விசயத்தில் அன்னையவர்கள் மிகச் சிறந்த கல்வி ஞானத்தைப் பெற்றிருந்த காரணத்தினால், மக்கள் அதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு அன்னையை அணுகக் கூடியவர்களாக இருந்தார்கள். சொத்துப் பங்கீடு விசயத்தில் மிகவும் சிக்கலான பிரச்னைகளுக்கு அன்னையவர்கள் மிக எளிதாக, அதனை தீர்த்து வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) இறுதிக் கணமும், அன்னையும்..,

ஆயிஷா (ரழி) அவர்களுக்கிருந்த மார்க்க விசய ஞானம், இன்னும் சிறப்பான குணநலன்கள் ஆகியவற்றின் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னையவர்கள் மீது அலாதியான அன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார்கள். ஒரு சமயம் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் உடல் நலமற்றிருந்தார்கள், அன்னையவர்களும் உடல் நலமற்றிருந்தார்கள். அப்பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆயிஷாவே! எனக்கு முன்பாக நீங்கள் இறந்து விட்டீர்கள் என்று சொன்னால், நானே உங்களைக் குளிப்பாட்டுவேன், நானே உங்களுக்கு கஃபன் இடுவேன், இன்னும் நானே உங்களை மண்ணறைக்குள் இறக்கி வைப்பேன் இன்னும் உங்களுக்காக நான் பிரார்த்தனையும் செய்வேன் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட அன்னையவர்கள், எனது மரணத்தை நீங்கள் கொண்டாடுவீர்கள் போலிருக்கின்றதே! என்று வேடிக்கையாகக் கேட்டு விட்டு, உங்களுக்கு முன் நான் மரணித்து விட்டால், நான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த வீட்டிற்கு ஒரு புது மனைவியைக் கொண்டு வந்து விடுங்கள் என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னையைப் பார்த்து புன்முறுவல் பூத்தார்கள், உடல் நலம் தேறாமலேயே தன்னைப் படைத்தவனிடம் சென்று சேர்ந்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள்..!

என்னுடைய முறையின் பொழுது எனது வீட்டில் இருந்து கொண்டிருக்கின்ற நிலையில், அதுவும் எனது மடியில் வைத்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணித்தது கண்டு நான் பெருமைப்படுகின்றேன், அதனைப் பாக்கியமாகவும் கருதுகின்றேன் என்று அன்னையவர்கள் பெருமையோடு கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அன்னையவர்களின் சகோதரர் அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அந்த இறுதிக் கணங்களில் அன்னையவர்களின் இல்லத்தில் நுழைகின்றார்கள். நுழைந்தவரின் கையில் பல் துலக்கக் கூடிய மிஸ்வாக் குச்சி இருக்கின்றது. அந்த மிஸ்வாக் குச்சியை ஆசையுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பார்க்கின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் விருப்பத்தை அறிந்து கொண்ட அன்னையவர்கள், உங்களுக்காக மிஸ்வாக்கைக் கொண்டு பல் துலக்க ஆசையாக இருக்கின்றதா? எனக் கேட்க, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சைகையால் சம்மதம் தெரிவிக்க, அன்னையவர்கள் தனது சகோதரரிடமிருந்து மிஸ்வாக்கைப் பெற்றுக் கொண்டார்கள். அந்த மிஸ்வாக் கடினமாக இருந்த காரணத்தால் அன்னையவர்கள் தனது பற்களால் கடித்து, அந்த மிஸ்வாக்கை மிருதுவாக்கி, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பற்களை துலக்கி சுத்தப்படுத்தி விடுகின்றார்கள். அருகில் இருந்த பாத்திரத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது கைகளை நனைத்து அடிக்கடி தனது முகத்தில் தடவிக் கொண்டே..,

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, மரணம் அதிக வேதனையுடையதாக இருக்கின்றது.

பின் தனது விரல்களை உயரே சுட்டிக் காட்டியவர்களாக, மிகச் சிறந்த நண்பரை நோக்கி (நான் விரைகின்றேன்) என்று கூறினார்கள்.

அது கணமே, உடல் என்னும் கூட்டுக்குள் சிறையிருந்த உயிர், வல்லோனை நோக்கி விரைந்தது.

கனவு நிறைவேறுதல்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன் அன்னையவர்கள் ஒரு கனவு கண்டார்கள். அந்தக் கனவில் மூன்று நிலவுகள் அன்னையின் இல்லத்தில் இறங்குவதாகக் கண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்த பொழுது, அன்னையவர்களின் இல்லத்தில் தான் அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இன்னும்;, அன்னையவர்கள் கண்ட கனவில் தோன்றிய மூன்று நிலவுகளில், ஒரு நிலவு அவர்களது இல்லத்தை ஒளியூட்டிக் கொண்டிருப்பதன் மூலம் அவர்கள் கண்ட கனவின் ஒரு பகுதி நிறைவடைந்து விட்டது என்று அபுபக்கர் (ரழி) அவர்கள் அந்தக் கனவின் விளக்கத்தைக் கூறினார்கள். பின்னர் அன்னையவர்களின் தந்தையாரான அபுபக்கர் (ரழி) அவர்கள் இறந்த பொழுது, தனது ஆருயிர்த் தோழர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டார்கள். பின் உமர் (ரழி) அவர்களும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டதுடன், அன்னையவர்களின் கனவு நிறைவேறியது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் யார் மீது அதிகமான அன்பு கொண்டிருந்தார்களோ, இன்னும் அவர்களது அதிக விருப்பத்திற்கு உரியவராக இருந்தார்களோ, அந்த அன்னையவர்களின் இல்லத்திலேயே அவர்களது உயிரும் பிரிந்தது என்று இமாம் தகபி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆம்! இதன் மூலம் தனது விருப்பத்திற்குரிய மனைவியான ஆயிஷா (ரழி) அவர்களதும், இன்னும் தனது விருப்பத்திற்குரிய இடமுமான அன்னையவர்களின் இல்லத்திலேயே இறந்தார்கள், அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

அன்னையவர்கள் ஹிஜ்ரி 58 ஆம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு, சொர்க்கச் சோலைகளை நாடிச் சென்று விட்டார்கள். தனது 66 ம் வயதில் ரமளான் மாதம் 17 ஆம் நாள் மரணமடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மதீனாவில் ஜன்னத்துல் பக்கீ என்ற நல்லடக்க பூமியில் அன்னையவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அபூஹுரைரா (ரழி) அவர்கள் அன்னையவர்களுக்கு இறுதித் தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்துல்லா பின் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் சித்தீக் (ரழி) மற்றும் அப்துல்லா பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் சித்தீக் (ரழி) ஆகிய இருவரும் அன்னையின் உடலை மண்ணறைக்குள் வைத்தனர்.

(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).
(89:27-30)

நன்றி : ottrumai.net
 

Thursday, September 23, 2010

மனிதர்களின் தீர்ப்பை விட அல்லாஹ்வின் தீர்ப்பு சிறந்தது!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
பாபர் மசூதி வழக்கில் 28ம் தேதி தீர்ப்பு
மனிதர்களின் தீர்ப்பை விட அல்லாஹ்வின் தீர்ப்பு சிறந்தது!
200 ஆண்டுகாலமாக அடிமைபட்டு கிடந்த நம் தாய்நாடான இந்தியாவில் ஆங்கிலேய அராஜக அரசாங்கம் கொடுத்த பல பெரிய அரசாங்க பதவிகளைகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு இந்திய நாட்டு விடுதலைக்காக மக்களோடு மக்களாக சேர்ந்து பின்னிப்பினைந்து இந்திய நாட்டிற்கு சுதந்திரம் தேடிக்கொடுத்த நல்ல சமுதாயம் நம் முஸ்லிம் சமுதாயம் அன்றைய சூழ்நிலையில் நம் சமுதாயத்தை எவரும் தீவிரவாதி என்று பச்சை குத்தவில்லை!
ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் முஸ்லிம்களாகிய நாம் சிறுபான்மையினராக அடையாளம் காணப்பட்டு ஒடுக்கப்பட்டு, தரம்தாழத்தப்பட்டு ஒரு சில இடங்களில் இறைவனைக்கூட தொழ இயலாத வண்ணம் தடுக்கப்பட்டோம் இறுதியாக இந்துக்கள் அல்ல மாறாக இந்துசகோதரர்களில் ஒழிந்துக் கொண்டுள்ள சில கருப்பு ஆடுகளான காவி கயவர்களால் அல்லாஹ்வை மட்டும் வணங்கக்கூடிய பாபர் மசூதியை இழந்துவிட்டோம் இன்று இவர்களின் சூழ்ச்சியால் மசூதி இருந்த இடத்தில் தொழுவதா? கல்லை கும்பிடுவதா என்று தீர்மானிக்க உள்ளார்கள் இதன் தீர்ப்பு வரப்போகிறதாம்!
இந்திய நாட்டு சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயமாகிய நமக்கு இன்றைய தினம் நியாயமான தீர்ப்பு வழங்கப்படுமா? அல்லது மஹ்ஷர்வரை பொறுத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்படுமா? பொறுத்திருப்போம்!
பாபர் மசூதி தீர்ப்பை முஸ்லிம்களாகிய நாம் எவ்வாறு அணுகுவது
பாபர் மசூதி தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருந்தால் இந்துக்களுக்கு மன வேதனையும் இந்துக்களுக்கு சாதகமாக இருந்தால் இஸ்லாமியர்களுக்கு மன வேதனையும் ஏற்படும் இது இனப் பிரிவினைக்காக வகுக்கப்பட்ட 50 ஆண்டுகால பொன்விழா சூழ்ச்சி மட்டுமல்லாது வரலாற்று சதியுமாகும். இந்த தீர்ப்பு 2010ல் மட்டுமல்ல 2050ல் வெளியானாலும் இந்திய பாரம்பரியமிக்க இந்துக்கள் இஸ்லாமியர்கள் இனப் பிரிவினைக்கு பாதகமான சூழலே நிழவும். (அல்லாஹ் மன அமைதியை நம் இந்திய நாட்டு இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் கிருத்தவர்கள் உட்பட அனைத்து பிரிவினரின் மீதும் பொழிவானாக!)
1) தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருந்தால்
பாபர் மசூதிக்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கவிருக்கும் நீதிமான்கள் பாபர் மசூதியை இடித்தது முறையல்ல என்று தீர்ப்பளித்து அந்த இடம் இஸ்லாமியர்களுக்கு உரியது என்று தீர்ப்பளித்தால் நாம் நமக்கு உரிய நியாயமான தீர்ப்பை இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுள்ளோம் என்று எண்ணி அல்ஹம்துலில்லாஹ் (புகழ் அனைத்தும் இறைவனுக்கே) என்று கூறி அமைதி காக்க வேண்டும் ஆரவாரப்படக்கூடாது இதை மீறி தம்பட்டம் அடித்து ஆரவாரப்பட்டால் நமக்கு எதிராக உள்ளவர்களுக்கு மனவேதனை ஏற்படும் மீண்டும் அங்கிருந்து ஒரு பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும்! எனவே தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறலாம்!
2) தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக இருந்தால்
பாபர் மசூதிக்கு தீர்ப்பு வழங்கும்போது அது இந்துக்களுக்கு சாதகமாக அமைந்து நமக்கு எதிராக அமைந்துவிட்டால் நாம் ஆத்திரப்படக்கூடாது ஏனெனில் நாம் இஸ்லாமியர்கள் அதாவது அமைதியை விரும்புபவர்கள். எனவே இந்துக்களுக்கு தீர்ப்பு சாதகமாக அமையும்பட்சத்தில் நாம் கீழ்கண்டவாறு நம்மை திடப்படுத்திக்கொள்ள வேண்டும்! மேலும் கீழ்கண்டவாறு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும்!
  1. பாபர் மசூதிக்கு தீர்ப்பு வழங்குபவன் மனிதன் இறைவனல்ல!
  1. அல்லாஹ் தீர்ப்பு வழங்குவோரில் உயர்ந்தவன்! அவன் மஹ்ஷர் எனும் மறுமைநாளில் நமக்கு இழைக்கப்படட அநீதிக்கு பகரமாக நன்மையை கொடுப்பான்!
மேற்கண்ட இந்த இரண்டு நம்பிக்கைகளையும் கீழ்க்கண்ட ஒரு நபிமொழியின் மூலம் உணர இயலும்
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலீ) நூல்: புகாரீ 5200 
மேற்கண்ட நபிமொழியை உணர்ந்த நாம் இனி கீழ்கண்ட அருள்மறை வசனத்தின் சுவையையும் உணர வேண்டும்
முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன். எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள். மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:135)
இங்கு பாபர் மசூதிக்கு தீர்ப்பு நமக்கு சாதகமாக அமையாத பட்சத்தில் முஸ்லிம்களாகிய நாம் நம் சமுதாயத்திற்கு நன்மையை தேடிக்கொள்ளும் விதமாக அமைதிகாக்க வேண்டும் அவ்வாறு அமைதி காப்பதால் மறுமையில் இவர்களுக்கு (காவி கயவர்களுக்கு) எதிராக அல்லாஹ்வுக்கு சாட்சி கூறுபவர்களாக நாம் மாறலாம்!
இன்று இவர்கள் நம்மை வென்றுவிடலாம் ஆனால் மறுமையில் நாம் நமது சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை படைத்த ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்விடம் எடுத்துக்கூறி அல்லாஹ்வுக்காகவே நாம் சாட்சிகளாக மாறிவிடலாம்!
நபிகளார் (ஸல்) காட்டிய மாபெரும் பொறுமை
தாயிப் நகரத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள் கடுமையான துன்பத்திற்கு உள்ளாக்கப்ட்டார்கள் உச்சகட்ட வேதனைக்கு என்று கூறும் அளவுக்கு சொல்லொனா துயரங்களை அனுபவித்தார்கள் அப்படிப்பட்ட நேரத்தில் கூட ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அவரின் முன் தோன்றி தாயிப் நகரத்தை இருமலைகளுக்கிடையில் வைத்து நசுக்கிவிடவா என்று கேட்க நபிகள் பெருமனாரோ தாயிப் நகர மக்கள் என்றைக்காவது ஒருநாள் மனம் திருந்தலாம் என்று எண்ணி அந்நரக மக்களின் மீது கருணை காட்டினார்கள் மன்னித்து விட்டார்கள் பின்னர் மக்கா மாநகரை அடைந்தார்கள்.
சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே அன்று நம்முடைய அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு எதிராக கொடுமை இழைத்த சமுதாயத்தின் மீது காட்டியை பொறுமையை இன்று முஸ்லிம்களாகிய நாம் இந்துக்கள் மீது காட்டி பாபர் மசூதியின் தீர்ப்பின் போது அமைதிகாக்கலாமே! என்றைக்காவது ஒருநாள் தாங்கள் பாபர் மசூதியை இடித்தது தவறுதான் என்று உணர்ந்து இவர்கள் இஸ்லாத்தை தழுவலாமே இதனால் அல்லாஹ் நமக்கு ஒரு நன்மையை முற்படுத்தி வைக்கலாமே!
அல்லாஹ்வின் மீது ஈமான் வைத்தவன் என்றுமே துன்பப்பட மாட்டான் அதுபோலத்தான் இந்த தீர்ப்பும்!
 
1)      தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக இருந்தால் நமக்கு நியாயம் கிடைத்த மகிழ்ச்சி கிடைக்கும். அல்ஹம்துலில்லாஹ்
2)      தீர்ப்பு இந்துக்களுக்க சாதகமாக இருக்கம் பட்சத்தில் தீர்ப்பளிப்பவன் சாதாரண மனிதன்தான் அல்லாஹ் கிடையாது என்ற பெறுமிதம் கிடைக்கும்! இதுவும் ஒருவகையில் மகிழ்ச்சிதானே! இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவுன்
எனவே முஸ்லிம்களாகிய நாம் அமைதி விரும்பிகள் என்பதை இந்த உலகிற்கு உணர்த்த இது ஓர் உண்ணதமான வாய்ப்பு இதை நலுவவிடாதீர்கள். பாபர் மசூதி தீர்ப்பு நமக்கு பாதகமாக அமைந்துவிட்டதே என்ற எண்ணி பொங்கி எழுந்து உங்கள் குடும்பத்தை நாசப்படுத்திக்கொள்ளாதீர்கள் நாம் பொங்கி எழ வேண்டும் அதனால் சிறை சென்று குடும்பத்தாரை நடுத்தெருவில் நிற்க வைக்க வேண்டும் என்று கருப்பு ஆடுகள் சூழ்ச்சிகள் செய்யலாம் எனவே நாம் உயிர் உள்ள வரை பாபர் மசூதிக்கு நீதிமன்றத்தின் கதவுகளை தட்டலாம் உயிருடன் இருக்கும் போது நீதி கிடைக்கவில்லை எனில் மரணித்தபிறகாவது மஹ்ஷரில் (மறுமையின் நியாயத்தீர்ப்பு நாளில்) அல்லாஹ்விடம் நீதியை பெறலாம்!
அல்லாஹ் மன அமைதியை நம் இந்திய நாட்டு இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் கிருத்தவர்கள் உட்பட அனைத்து பிரிவினரின் மீதும் பொழிவானாக!
என் இந்திய நாட்டு அனைத்து மத, மார்க்க சகோதர, சகோதரிகளே இந்த இக்கட்டான பாபர் மசூதி தீர்ப்புநாளில் இனக்கலவரத்தை தூண்டும் சக்திகளின் மாய வலையில் சிக்கி நம் சகோதரத்துவத்தை சீர்கெடுத்து நம்மிடையே பகைமையை வளர்த்துக் கொள்வதைவிட தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வோமாக!
சிந்திக்க படைக்கப்பட்ட சமுதாயமே இதோ சிந்திக்க சில வசனங்கள்
அல்லாஹ் கூறுகிறான்: ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். (எதிரிகளை விஞ்சும் வகையில்) பொறுமையில் நிலைத்திருங்கள். (சத்தியத்திற்காகத் தொண்டு செய்திட) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருங்கள்” (அருள்மறை குர்ஆன் 3:200)
வேறோர் இடத்தில், ‘யார் பொறுமையை மேற்கொள்கிறார்களோ மேலும் மன்னிக்கவும் செய்கிறார்களோ அவர்களின் அந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயல்களைச் சேர்ந்ததாகும்’ (அருள்மறை குர்ஆன் 42:43)
நபி(ஸல்) அவர்கள் ஏதேனும் துன்பத்தைக் கண்டால் மனம் வெறுக்கும் காரியம் நிகழக் கண்டால் அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால் (எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்வார்கள்! (நூல்: இப்னு மாஜா)

‘பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். திண்ணமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’ (அருள்மறை குர்ஆன் 2:153)

பொறுமைக்கு இலக்கணம் இஸ்லாமியர்களே என்பதை இந்த உலகிற்கு உணர்த்த இதுவே சிறந்த தருணம்! தவறவிடாதீர்கள்! இஸ்லாத்தின் கோட்பாடுகளை தவறிவிட்டு விடாதீர்கள்
சிந்திப்பீர்! செயல்படுவீர்!
நன்றி : islamicparadise

Saturday, September 18, 2010

திரித்துவம் பற்றிய கேள்விக்கு Dr. ஜாகிர் நாயக்கின் பதில்


இது அமெரிக்காவில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கும் டாக்டர் வில்லியம் கேம்பெல் அவர்களுக்கும் நடந்த விவாத்தின் போது, இறுதியில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோதரி ஒருவர் Dr. ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்ட கேள்வி மற்றும் அதற்கு Dr. ஜாகிர் நாயக் அவர்கள் அளித்த விளக்கத்தின் தமிழாக்கம் ஆகும்.
சகோதரியின் கேள்வி: -

தண்ணீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் பனிக்கட்டியாகவும், தண்ணீராகவும் மற்றும் நீர் ஆவியாகவும் இருப்பது போல் ஒரு கடவுள் பிதா, தேவ குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரில் இருக்கிறார். இது திரித்துவக் கோட்பாட்டுக்கான அறிவியல் விளக்கமாகும். இந்த விளக்கம் சரியானது தானா?

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் விளக்கம்: -
தண்ணீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் பனிக்கட்டியாகவும், தண்ணீராகவும் மற்றும் நீர் ஆவியாகவும் இருப்பது போல் ஒரு கடவுள் பிதா, தேவ குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரில் இருக்கிறார் என்று சில கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். அறிவியல் கோட்பாட்டின் படி தண்ணீர் மூன்று நிலைகளில் இருப்பது உண்மை தான். ஆனால் தண்ணீருக்கான மூலப்பொருள்கள் (components) மாறாமல் அப்படியே இருக்கிறது. அதாவது H2O, ஹைட்ரஜனின் இரண்டு அணுக்களும், ஆக்ஸிஜனின் ஒரு அணுவும் தான் தண்ணீரின் மூலப்பொருள்கள் ஆகும். அந்த மூலப்பொருள்கள் அப்படியே மாறாமல் இருக்கிறது. ஆனால் அதன் நிலை தான் திட, திரவ மற்றும் வாயு நிலைக்கு மாறுகிறது.
அடுத்து இவர்களின் திரித்துவத்தை எடுத்துக் கொண்டால், தண்ணீர் மூன்று நிலைகளில் இருப்பதைப் போல் ஒரே கடவுள் மூவரில் இருக்கிறார் என்கின்றனர். ஆனால் தண்ணீரின் மூலப்பொருள் அதன் மூன்று நிலைகளிலும் ஒன்றாக இருப்பது போல இந்த மூவரின் மூலப்பொருள் ஒன்றாகவா இருக்கிறது? கடவுள் மற்றும் பரிசுத்த ஆவி ஆகியோர் ஆவியினால் (made of sprit) ஆனவர்கள். ஆனால் மனிதராகிய இயேசுவோ சதைத் துண்டுகளாலும், எலும்புகளாலும் உருவாக்கப்பட்டவர். எனவே அவர்கள் மூலப்பொருட்களால் சமமானவர்கள் அல்லர். மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு உணவு அவசியமாகிறது. ஆனால் கடவுள் உயிர் வாழ உணவு உண்ண வேண்டிய அவசியம் இல்லை. அதனால் அவர்கள் எப்படி சமமானவர்களாக முடியும்? மேலும் இதை இயேசு கிறிஸ்துவே பைபிளில் உறுதிப்படுத்துகிறார்.
லூக்கா, 24 வது அதிகாரம், வசனங்கள் 36-40:
இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்(தார்).
இயேசு கிறிஸ்து அவருக்கு தமக்கு சதை உடைய கைகள், கால்கள் இருக்கிறது என்றும் அவருடைய சீடர்கள் கொடுத்த உணவை சாப்பிட்டும் தாம் ஒரு ஆவியல்ல (no sprit) என்றும் நிரூபித்தது எதற்காக? தாம் கடவுள் என்பதற்காகவா? இல்லை! தாம் கடவுள் இல்லை என்பதற்காவே தாம் ஆவி (sprit) இல்லை என்று நிரூபித்தார்! ஏனென்றால் ஆவியானவருக்கு சதை மற்றும் எலும்புகள் இல்லை. எனவே அறிவியல் மூலமாகவும் இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியும் கடவுளாக இருக்க முடியாது என்பது நிரூபனமாகின்றது.
மேலும் திரித்துவம் (Concept of Trinity) என்ற தத்துவமோ (மூன்று கடவுள் கொள்கை) அல்லது அந்த வார்த்தையோ பைபிளில் எந்த ஒரு இடத்திலும் காணப்படவில்லை. ஆனால் திருக்குர்ஆனில் திரித்துவம் குறித்துக் கூறப்பட்டிருக்கிறது.
திருக்குர்ஆன் அத்தியாயம் 4,ஸுரத்துந் நிஸா, வசனம் 171 ல் அல்லாஹ் கூறுகிறான்: -
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் ('குன்' ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். (அல்-குர்ஆன் 4:171)
மேலும் அத்தியாயம் 5, ஸுரத்துல் மாயிதா, வசனம் 17 ல் அல்லாஹ் கூறுகிறான்: -
திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். 'மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்' என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்-குர்ஆன் 5:17)
'நான் கடவுள்' என்று இயேசு கிறிஸ்து சொல்லவே இல்லை. திரித்துவம் பற்றிய கடவுள் தத்துவம் பைபிளில் அறவேயில்லை. பைபிளில் திரித்துவத்தை ஒத்திருக்கிறதாக அவர்கள் கூறும் ஒரே ஒரு வார்த்தை என்னவெனில்,
பையிளின் புதிய ஏற்பாடு, I யோவான், 5 அதிகாரம், வசனம்-7
பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;
ஆனால், மிகச்சிறந்த கிறிஸ்தவ அறிஞர்களால் பைபிளின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பைப் பார்த்தோமேயானால் (Revised Standard Version), அதில் அவர்கள், 'பைபிளின் மேற்கண்ட வசனம் இட்டுக்கட்டப்பட்டு இடை செறுகப்பட்ட வசனம்' என்று கூறி அந்த வசனத்தை பைபிளிலிருந்து நீக்கிவிட்டனர்.
இயேசு கிறிஸ்து நான் கடவுள்' என்று ஒரு போதும் கூறியதே இல்லை. பைபிளின் எந்த ஒரு இடத்திலும் 'நான் கடவுள்' அல்லது 'என்னை வணங்குங்கள்' என்று இயேசு கிறிஸ்து சொன்னதாக முழுமையான ஒரே ஒரு வசனம் கூட கிடையாது.
ஆனால் உண்மையில் நாம் பைபிளைப் படித்தோமேயானால், (இந்த திரித்துவக் கோட்பாட்டுக்கு முரணான ஏராளமான வசனங்கள் இருக்கின்றன.)
யோவான், 14 அதிகாரம், வசனம் 28
நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
யோவான், 10 அதிகாரம், வசனம் 29
அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
மத்தேயு, 12 அதிகாரம், வசனம் 28
நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
லூக்கா, 11 அதிகாரம், வசனம் 20
நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
யோவான், 5 அதிகாரம், வசனம் 30
நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை!
(சுயமாக எதையும் செய்யாமல் பிறரின் சொல்படி செய்கிறவர் எப்படி கடவுளாக முடியும்?)
யார் ஒருவர் தன் சுயவிருப்பப்படி எதையும் செய்யாமல் இறைவனின் விருப்பப்படி செய்கிறாறோ அவர் 'முஸ்லிம்' ஆவார். ஏனென்றால் 'முஸ்லிம்' என்பவர் 'தன் விருப்பங்களை இறைவனின் விருப்பப்படி அமைத்துக் கொள்பவராவார்'. இயேசு கிறிஸ்துவும் தம் விருப்பப்படி தாம் எதையும் செய்யவில்லை என்றும் கடவுளின் விருப்பப்படி செய்கிறேன் என்று கூறியதால் அவரும் ஒரு முஸ்லிம் ஆவார்.
இயேசு கிறிஸ்து இறைவனின் சிறந்த தூதர்களில் ஒருவர் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். மேலும் முஸ்லிம்களாகிய நாங்கள்:
  • ஆண் துணையில்லாமல் பிறந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அற்புதம் வாய்ந்தவை என்று நம்புகிறோம்
  • பைபிள் கூறுவதைப் போல, இறைவனின் அனுமதியுடன் இறந்தவரை உயிர்ப்பித்தார் என்று நம்புகிறோம்
  • பிறவிக் குருடர்களுக்கு பார்வை அளித்தார் என்றும் நம்புகிறோம்
  • குஷ்டரோகிகளைக் குணப்படுத்தினார் என்றும் நம்புகிறோம்
எனவே முஸ்லிம்களாகிய நாங்கள் இயேசு கிறிஸ்து இறைவனின் உண்மையான தூதர் என்று நம்புகிறோம். அவருக்கு மதிப்பளிக்கின்றோம். ஆனால் அவரே இறைவன் என்று நம்புவதில்லை. அவர் மூன்று கடவுள்களில் ஒருவராக இருக்கவில்லை. மேலும் இந்த திரித்துவம் என்பது இல்லவே இல்லை.
திருக்குர்ஆன் கூறுகிறது.
அல்லாஹ் அவன் ஒருவனே (அல்-குர்ஆன் 112:1)
நன்றி:www.suvanathendral.com/

Thursday, September 16, 2010

ஷவ்வால் மாத (ஆறு) நோன்புகள்


ரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரக்கூடிய மாதமான‌ ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம். இந்த ஷவ்வால் மாதத்தில் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி(ஸல்)அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றாகும். இந்த ஆறு நோன்புகளையும் நோற்பதினால் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை நமக்கு கிடைக்கும். ஆனால், நம்மில் அநேகமானோர் இந்த ஷவ்வால் மாத ஆறு நோன்பைப் பற்றி முழுமையாக அறியாத நிலையில் இருக்கிறோம். இன்னும் சிலர் இந்த‌ நோன்பின் சிறப்பை அறிந்தும் அதைக் கடைப்பிடிப்பதில் அலட்சியம் செய்கின்றனர். இன்னும் சிலரோ அறியாமையால், பெண்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்றுவதற்காக‌ இது அவர்களுக்கு மட்டும் உரியது என்று கருதுகின்றனர்.
யார் ரமலான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம் என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.                         
                                                            நூல்: முஸ்லிம்
மேற்கண்ட ஹதீஸ் பெண்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக முஸ்லிம்கள் அனைவருக்கும் கூறப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஷவ்வால் நோன்பின் சிறப்பும் தத்துவமும்:
நாம் நோற்கும் ஒவ்வொரு அமலுக்கும் 10 நன்மைகள் என்ற‌ அடிப்படையில் நமது முப்பது நோன்புகளுக்கு 300 நோன்புகளின் நன்மைகள் என்பதுடன், தொடர்ந்து வரக்கூடிய ஷவ்வாலின் இந்த ஆறு நோன்புகளுக்கு (6x10 =) 60 நோன்புகள், ஆக (300+60 =) 360 நோன்புகள் என்று ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மை நமக்கு கிடைக்கிறது என்பதை ஹதீஸ்களில் இருந்து அறிய முடிகிறது. ஆறு நோன்பின் தத்துவம் இது தான்!
இப்படிப்பட்ட சிறப்புமிக்க நோன்பை பலர் நோற்பதில்லை. ரமலான் மாதத்தின் 30 நோன்பை நோற்ற நமக்கு இந்த ஆறு நோன்புகளை நோற்பது ஒன்றும் சிரமமான காரியமல்ல. நன்மை எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதை ஆர்வத்துடன் தேடி முறையாக செயல்படுத்துவதே மறுமையை நம்பக்கூடிய முஃமீன்களின் அழகிய பண்புகளாக இருந்தது என்பதற்கு உத்தம நபித்தோழர்களின் சரித்திரங்கள் நமக்கு சான்று பகர்கின்றன. எனினும் இந்த ஷவ்வால் நோன்பைக் கடமையான நோன்பு என்று கருதிவிட‌க் கூடாது. அதன் சிறப்புகளையும் அளப்பரிய நன்மைகளையும் உணர்ந்து அவற்றை அடைய விரும்பியவர்கள் நோற்றுக்கொள்ளலாம்.
ஆறு நோன்பு ஆதாரமற்றதா?
இந்த ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்று சில‌ர் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறானதாகும். ஆறு நோன்பு நோற்பதற்கு ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.
ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது; அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                            அறிவிப்பவர்: ஸஃப்வான்(ரலி);  நூல்: தாரிமி (இதே ஹதீஸ் இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது)
எப்போது நோற்கவேண்டும்?
ஆறு நோன்புகளை பெருநாள் முடிந்து மறுநாளே ஆரம்பித்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நோற்க வேண்டுமா? அல்லது இம்மாதத்தில் ஏதேனும் ஆறு நாட்களில் விட்டு விட்டு நோற்கலாமா? என்பதற்கான விளக்கத்தைப் பார்ப்போம்.
யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நோன்புகள் நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்.
                          அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி);   நூல்:முஸ்லிம்
இந்த ஹதீஸில் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "தொடர்ந்து" என்ற வார்த்தையிலிருந்து பெருநாளைக்குப் பிறகுள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்கவேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.  இது தவறான கருத்தாகும். ஏனெனில் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, வரக்கூடிய‌ ஷவ்வாலிலும் ஆறு நாட்கள் நோன்பைத் தொடரவேண்டும் என்ற கருத்தில்தான் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே தவிர, பெருநாள் முடிந்து மறுநாளே ஆரம்பிக்கவேண்டும் என்றோ, அதை ஆறு நாட்களும் தொடர்ச்சியாகப் பிடிக்கவேண்டும் என்றோ கூறப்படவில்லை.
ரமலானைத் தொடர்ந்துதான் ஆறு நாட்கள் நோன்பு பிடிக்கவேண்டும் என்று அப்படியே வைத்துக் கொண்டாலும், பெருநாளில் நோன்பு பிடிப்பதற்குத் தடை உள்ளது.  ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்கள் கூட ஷவ்வால் பிறை 2 லிருந்து 7 வரை தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்றுதான் கூறுகின்றனர்.  இதில் "ரமலானைத் தொடர்ந்து" என்ற கருத்து அடிபட்டுப் போகின்றது.  ஒரு நாள் விடுபட்டு விட்டால்கூட‌ அது ரமலானின் தொடர்ச்சியாக ஆகாது.  மேலும் ஷவ்வால் பிறை 2 லிருந்து 7 வரைதான் ஆறு நோன்பு பிடிக்கவேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை. எனவே ஆறு நோன்புகள் தொடர்ச்சியாகப் பிடிக்கவேண்டும் என்பது ஆதாரமற்றதாகும். நபி(ஸல்)அவர்கள் ஷவ்வால் மாதத்தில் நோற்க வேண்டும் எனக்கூறினார்களே தவிர, ஷவ்வால் மாதத்தில் இந்த நாட்களில் தான் வைக்கவேண்டுமெனக் கூறாததால் ஷவ்வால் மாதத்தின் எந்த நாட்களிலும் தொடர்ந்தோ,விட்டுவிட்டோ வைக்கலாம். ஆக, (ஈதுல் பித்ர்) பெருநாள் முடிந்து மறுநாளிலிருந்தே தொடர்ச்சியாக ஆறு நாட்கள் இடைவிடாது நோன்பு நோற்கவேண்டுமென்பதே அவசியமில்லை. ஆனால் "ஷவ்வாலில்" என்று ஹதீஸ்களில் இடம் பெறுவதால் ஷவ்வால் மாதம் முடிவதற்குள் அந்த ஆறு நோன்புகளையும் வைத்து விட வேண்டும்.
அதாவது ஆறு நோன்புகளை நோற்கக்கூடிய ஒவ்வொருவரும் தத்தமது வசதிக்கு ஏற்ப ஷவ்வால் மாத கால எல்லைக்குள் அந்த நோன்புகளை நோற்றுவிடவேண்டும். இதையே மேற்கண்ட‌ ஹதீஸ்களும் கூறுகின்றன‌. எனவே, இந்த‌ நோன்புகளை தொடர்ச்சியாக பிடிக்கவேண்டுமென்றோ அல்லது மாதத்தின் ஆரம்பப் பகுதியில்தான் பிடிக்கவேண்டுமென்றோ இல்லை என்பதை இங்கு நாம் புரிந்துக்கொள்ளவேண்டும். மேலும் பெருநாளைக்கு மறுநாள் முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் பிடிக்கவேண்டும் எனும்போது இந்த நாட்களில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களோ அந்த நாட்களில் நோற்க இயலாமல் போகும் மற்றவர்களோ அந்த நன்மையை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆறு நோன்பு பற்றிய இதர சந்தேகங்களும் தெளிவுகளும்:
  • தனித்தனியாக ஆறு நோன்புகளையும் நோற்கலாம் எனும்போது வெள்ளிக்கிழமை வந்தால் அந்த நாளில் தனித்து நோற்கலாமா?
அப்படி இந்த ஆறு நோன்புகளையும் விட்டு விட்டு நோற்கும்போது வெள்ளிக் கிழமைகளில் தனியாக நோற்க முடியாது என்பதால் (பார்க்க), இடையில் வெள்ளிக்கிழமை வருமேயானால், வியாழக்கிழமையுடனோ சனிக்கிழமையுடனோ இணைத்தே நோற்கவேண்டும்.
  • ரமலான் கழித்து ஆறு நோன்பு பிடிக்கும் நேரத்தில் ரமலானில் விடுபட்ட நோன்பை நிறைவேற்றிவிட்டுதான் இந்த நோன்புகளை நோற்கவேண்டுமா?
கடமையான வணக்கம் மற்றும் உபரியான வணக்கம் என்ற இரண்டிலும் கடமையான வணக்கத்திற்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும். எனவே முதலில் களாவான நோன்புகளை நோற்ற பின்னர் இந்த சுன்னத்தான நோன்புகளை நோற்பதே சிறந்தது. ஏனெனில்,மனிதனின் வாழ்க்கைக் காலத்துக்கு எத்தகைய உத்தரவாதமும் கிடையாது. சில வேளை அவர் நோயாளியாகலாம். அல்லது ஏற்கனவே இருந்ததற்கு மேல் பலவீனப்பட்டு போக‌லாம். அல்லது மரணித்து கூட‌ விடலாம். எனவே ஒவ்வொருவரும் தன் மீதுள்ள கடமையான பொறுப்பை நிறைவேற்றிய பின்னர் சுன்னத்தான செயற்பாடுகளில் ஈடுபடுவதே பொருத்தமானதாகும். ரமலான் மாத நோன்பை இஸ்லாம் கடமை என விதித்துள்ளதால் அதை நிறைவேற்றிவிட்டால், இறைவனின் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். அதன் பின்னர் உபரியான நோன்பையும் நிறைவேற்றலாம். அதேசமயம், விடுபட்ட நோன்பு அதிக அளவில் இருந்து, அதையெல்லாம் நிறைவேற்றுவதற்குள் ஷவ்வால் முடிந்துவிடும் என்று அஞ்சினால், முதலில் ஷவ்வாலின் நோன்புகளை வைத்துக்கொள்ளலாம்.
இதல்லாமல், சில‌ சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் ரமலான் மாதம் விடுபட்ட நோன்பை அடுத்த ரமலானுக்கு முன் வரும் ஷஃஅபான் மாதம் வரை
நோற்கலாம் என்பதற்கு அன்னை ஆயிஷா(ரலி)அவர்களின் அறிவிப்பிலிருந்து விளக்கம் பெறமுடிகிறது.
"எனக்கு ரமலானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அவற்றை ஷஃஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களின் பணிவிடையில் ஈடுபட்டதே இதற்கு காரணம்."
                 அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி);  நூல்கள்: புகாரி,முஸ்லிம் 
அந்த‌ இடைப்பட்ட பத்து மாத கால எல்லைக்குள் ஆயிஷா(ரலி)அவர்கள் சுன்னத்தான நோன்புகள் எதனையும் நோற்றிருக்கமாட்டார்கள் என கூற‌முடியாது. ஏனெனில், அவர்களின் நோன்பு தொடர்பாக வந்துள்ள பெரும்பாலான‌ அறிவிப்புகளில் அவர்கள் சுன்னத்தான நோன்புகளை அதிகம் நோற்பவராக இருந்தார்கள் என்றே வந்துள்ளன. ஆக, விடுபட்ட ஃபர்ளான நோன்புகளை வேண்டுமென்றே தள்ளிப்போடாமல், தவிர்க்கமுடியாத அவசிய தேவைகளுக்காக பிற்படுத்தி நிறைவேற்றலாம் என்று விளங்கலாம்.
  •  விடுபட்ட‌ ரமலான் நோன்பையும் ஷவ்வாலின் ஆறு நோன்பையும் சேர்த்து நிய்யத் வைத்தால் இரண்டுக்குமுரிய நன்மைகளும் சேர்ந்து கிடைக்குமா? 
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் போன்று ஃபர்ளான‌ வணக்கங்களையும் சுன்னத்தான வணக்கங்களையும் இணைத்து செய்ய‌முடியாது. எவ்வாறு ஃபர்ளான தொழுகையையும் சுன்னத்தான தொழுகையையும் சேர்த்து ஒரே தொழுகையாக தொழ முடியாதோ அதைப் போல்தான் ஃபர்ளுடன் சேர்த்து எந்த உபரியான வணக்கங்களையும் செய்ய முடியாது. ஃபர்ளு என்பது வேறு, உபரியான வணக்கம் வேறு. இரண்டையும் தனித்தனியாக நிறைவேற்றும்போதுதான் அதனதன் நன்மைகள் கிடைக்கும்.
  • ஷவ்வால் முடிந்ததும் அதற்காக ஒரு பெருநாள் கொண்டாடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? 


'நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு நாட்களைதான்(பெருநாட்களாக) கொண்டாடுவதற்கு நபி(ஸல்)அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.' 
                   அறிவிப்பவர்:அனஸ்(ரலி);  நூல்: அபூதாவூது, நஸயீ 
ஆகவே, இந்த இரு நாட்களைத் தவிர வேறு எந்த நாட்களிலும் பெருநாள் கொண்டாட அனுமதியில்லை.
'நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாகச் செய்பவரது வணக்கம் நிராகரிக்கப்படும்' என்ற நபிகளாரின் எச்சரிக்கை கவனத்திற்கொள்ள
வேண்டியதாகும். 
                              அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி);   நூல்:புகாரி
அல்லாஹ் மிக அறிந்தவன்!
நன்றி : payanikkumpaathai
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails